அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் ஈரான் மீதான தாக்குதலை மோடி கண்டிக்காதது கோழைத்தனம், துரோகம்: காங்கிரஸ் கடும் விமர்சனம்

 

புதுடெல்லி: “ஈரான் மீதான தாக்குதலை மோடி அரசு கண்டிக்காதது, தார்மீக கோழைத்தனம், அரசியல் துரோகம்” என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் சமூக ஊடக தளத்தில், “ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் வான்வழி தாக்குதல் தொடங்கி சரியாக 21 நாள்கள், 3 வாரங்கள் ஆகிறது. பாஜ அரசால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட மோடி இஸ்ரேல் பயணத்திலிருந்து திரும்பி வந்து 23 நாள்கள் ஆகி விட்டன. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து ஈரான் மீது நடத்திய கடுமையான வான்வழி தாக்குதல் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் பொருளாதார சீர்குலைவுக்கு வழி வகுத்துள்ளது. இந்த தாக்குதலை மோடி அரசு கண்டித்ததா? விமர்சித்ததா? அல்லது கண்டனம் தெரிவித்ததா? என்றால் இல்லை என்பதே பதில். அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறி வைத்து படுகொலைகளை செய்து வருகிறது. இதனை மோடி அரசு கண்டித்ததா? விமர்சித்ததா? அல்லது கண்டனம் தெரிவித்ததா? என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்.

ஈரானில் உள்நாட்டு போருக்கு வழி வகுக்க கூடிய ஆட்சி மாற்றத்தையும், அரசு வீழ்ச்சியையும் திணிக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் எடுக்கும் கொடூரமான முயற்சிகளை மோடி அரசு கண்டித்ததா? விமர்சித்ததா? அல்லது கண்டனம் தெரிவித்ததா? என்பதற்கும் இல்லை என்பதே பதில். ஈரான் மீதான குண்டு வீச்சுகளையும், வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான ஈரானின் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துவதற்கு மோடி அரசு தீவிர ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டதா? அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் பெரிதாக பேசப்படும் தனது நட்பை பயன்படுத்தி பிரதமர் மோடி போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினாரா? என்ற கேள்விக்கும் இல்லை என்பதே பதில். இந்த நான்கு இல்லைகளும், இந்தியாவின் நாகரீக விழுமியங்களின் கோழைத்தனத்தையும், அரசியல் துரோகத்தையுமே பிரதிபலிக்கின்றன” என்று காட்டமாக குற்றம்சாட்டி உள்ளார்.

 

Related Stories: