நடிகர் விஜய்யால் எந்த பாதிப்பும் ஏற்படாது: கட்-அவுட்டுக்கு பால் ஊற்றுவதற்கும் ஓட்டு போடுவதற்கும் வித்தியாசம் இருக்கு: நச்னு நாலு கேள்வி

 

* பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலை சற்று அதிரடியாக பேசுபவர். இப்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் சற்று அமைதியாக பேசுபவர். மாறுபட்ட இவர்கள் இருவரது தலைமை, கட்சி வளர்ச்சிக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். ஆனால், இந்த இரண்டு தலைவர்களுக்கும் நோக்கம் ஒன்றுதான். அது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வலுவான கட்சியாக மாற்றி, அதன் வளர்ச்சியை மேம்படுத்துவது. அண்ணாமலை ஒரு துடிப்பான இளைஞர், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். அதேபோல், நயினார் நாகேந்திரன் அரசியல் அனுபவம் மிக அதிகம். அந்த அனுபவம் புதிதாக கட்சியில் இணைந்தவர்களைப் பக்குவப்படுத்தி, அரசியலில் ஒரு நல்வழியில் பயணிக்க வைக்கப் பெரிதும் உதவுகிறது.

* கல்வி நிதி உள்ளிட்டவை தமிழகத்துக்கு தரப்படவில்லை. தமிழகத்தை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை தேர்தல் களத்தில் எப்படி சமாளிப்பீர்கள்?

கல்வி நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது தவறான வாதம். கல்வி நிதியை பொதுவாக ஒதுக்க மாட்டார்கள். ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனியாகத்தான் நிதி ஒதுக்கப்படும். தமிழக அரசு எந்தெந்த திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளதோ, அந்தத் திட்டங்களுக்கெல்லாம் நிதி முறையாக வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, ‘நவோதயா’ பள்ளிகளை ஏற்றுக்கொள்ளாத மாநிலத்திற்கு அதற்கான நிதியை வழங்க இயலாது. ‘சிக்ஷா அபியான்’ போன்ற திட்டங்களில் இணைந்து அவற்றை நடைமுறைப்படுத்தினால், அதற்கான நிதி நிச்சயம் கிடைக்கும். எனவே, ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்று பழிபோடுவதில் உண்மையில்லை.

* இளம் வயதிலேயே சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் சேகர்பாபு போன்ற பலம் வாய்ந்த அனுபவசாலிகளை எதிர்த்து களம்கண்ட உங்களது நம்பிக்கை எதன் அடிப்படையிலானது?

பலம் வாய்ந்த தலைவர்களை எதிர்த்துப் போட்டியிடக் கட்சி எனக்கு வாய்ப்பளித்தது என் மீது வைத்துள்ள நம்பிக்கைதான். இளைஞர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு அரசியல் அனுபவத்தைக் கொடுத்து, எதிர்காலத் தலைவர்களாக மாற்றுவது பாஜவின் டிஎன்ஏலேயே இருக்கிறது. எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாதவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் ஒரே இயக்கம் இதுதான். உழைத்தால் உயர்வு என்ற நோக்கத்தோடும், நரேந்திர மோடி தன்னலமற்ற உழைப்பால் ஈர்க்கப்பட்டும் நாங்கள் களமிறங்கியுள்ளோம். கட்சி வளர்ச்சியடையும்போது என்னைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களின் வளர்ச்சியும் அதில் இருக்கும் என நம்புகிறோம்.

* விஜய் வருகையால் இளைஞர்கள் ஓட்டுகள் பாஜ பக்கம் வருவது பாதிக்கப்படும் சூழலை பாஜகவின் இளைஞரணி தலைவராக இருந்த நீங்கள், எப்படி எதிர்கொள்வீர்கள்? மாநிலத்தில் பெரிய கட்சியான அதிமுகவுடன் நடத்தப்படும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் டெல்லியில் நடத்தப்படுவதற்கும் விமர்சனங்கள் எழுகின்றனவே?

விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர், அவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலைப் பொறுத்தவரை இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எந்தக் கட்சி சரியாக இருக்கும் என்று சிந்தித்துத்தான் வாக்களிப்பார்கள். குறிப்பாகப் பாஜ பக்கமுள்ள இளைஞர்கள் கொள்கை ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் உறுதியாக இருப்பவர்கள். திரையில் பார்ப்பதற்கும், கட்-அவுட்டுக்கு பால் ஊற்றுவதற்கும் ஓட்டு போடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தமிழக இளைஞர்கள் இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

அதேபோல் விஜய்யின் வருகை பாஜவிற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி அதிமுக. அதன் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதை மோடி, அமித்ஷா ஏற்கனவே பல மேடைகளில் தெளிவுபடுத்தியுள்ளனர். நாங்கள் அவர்கள் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறோம். தொகுதிப் பங்கீடு எங்கு நடந்தால் என்ன? அதில் எந்தவித ஈகோவும் இல்லாமல், தமிழகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பேச்சுவார்த்தைகள் நேர்மையான முறையில் நடந்து வருகின்றன.

Related Stories: