தூத்துக்குடியில் விஜய் நண்பர் போட்டி? அஜிதா, மாவட்ட செயலாளர் ஷாக்

 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியதும், பல்வேறு மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்தபோது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் நீண்ட காலமாக நிர்வாகிகளை நியமிக்க முடியாமல் திணறி வந்தார். அதற்கு காரணம் அக்கட்சியினரிடையே நிலவி வந்த கோஷ்டி பூசல்தான். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனி மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்தார். வைகுண்டம் தொகுதிக்கு இதுவரை மாவட்ட செயலாளர் நியமிக்கப்படவில்லை.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர் பதவி தனக்குத்தான் கிடைக்கும் என்று ஆசையில் இருந்த அஜிதா ஆக்னல் புறக்கணிக்கப்பட்டு, சாமுவேல்ராஜ் என்பவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். பெரும்பாலும் முக்கிய அரசியல் கட்சிகளில் தூத்துக்குடியை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர் பதவிகளை நாடார் சமுதாயத்திற்கே வழங்கி வருகின்றனர். அதேபோல சட்டமன்ற தொகுதியிலும் நாடார் சமுதாயத்தினரையே பிரதான கட்சிகள் வேட்பாளராக நிறுத்துகிறது. குறிப்பாக கிறிஸ்தவ நாடார் வகுப்பை சார்ந்தவர்களே அதிகம் நிறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்த அஜிதா ஆக்னல் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காவது வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். அதேபோல நாடார் சமுதாயத்தை சேர்ந்த சாமுவேல்ராஜ், முருகன், மீனவர் சமுதாயத்தை சேர்ந்த கிஷோர் போன்றவர்களும் தங்களுக்கு சீட் வேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்த கான்ஸ்டைன் ரவீந்திரன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து மற்ற அரசியல் கட்சியினரும் மீனவர் சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே சிறுபான்மையினர் என்ற வகையில் மீனவர் சமுதாயத்தினர் திமுகவிற்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது மாநிலங்களவை எம்பி பதவி வழங்கியுள்ளதால் அது திமுகவிற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தவெக சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதால் விஜய் தனது நண்பரும், நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான ஸ்ரீநாத்தை தூத்துக்குடி தொகுதியில் நிறுத்துவதற்கு முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், தங்களுக்குத்தான் சீட் கிடைக்கும் என நம்பியிருந்த அஜிதா ஆக்னல், சாமுவேல்ராஜ், கிஷோர் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதேநேரத்தில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் சென்னையில் இருந்து வேட்பாளரை நிறுத்துவது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநாத் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எட்மண்ட் உறவினர் என கூறப்படுகிறது.

Related Stories: