தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே சர்வசமய ஜனநாயக திருவிழாவாகவே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாள் தொடங்கியதும், அரசியல் கட்சியினர் சுவர்களில் தங்கள் கட்சிக்கு ஆதரவான சின்னங்களை வரைவதிலும், தங்கள் கட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு ஓட்டு கேட்பதிலும் சுவர் விளம்பரங்கள் பிரதான இடம் வகிக்கும்.
சுவர்களில் இடம்பிடிப்பதில் நடக்கும் போட்டி கொலை பலியில் கூட முடியும். அந்தளவிற்கு கட்சித் தொண்டர்கள் அவரவர் சார்ந்த பகுதிகளில் சுவர் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த காலம் இருந்தது. தேர்தல் ஆணையம் சுவர் விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து கடந்த 3 பொதுத்தேர்தல்களாக கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக ஊராட்சி பகுதிகளில் மட்டும் சுவர் விளம்பரம் செய்யவும், இதற்கும் உள்ளாட்சிகளில் அனுமதி பெற வேண்டும், வீட்டு உரிமையாளர்களிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எவ்வித சுவர் விளம்பரங்களையும் செய்யக்கூடாது என்ற கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தேர்தல் காலங்களில் சின்னம் வரைவதற்காக சுண்ணாம்பு பூசுவோர், சுண்ணாம்பு பொடி விற்பனை பாதிக்கப்பட்டுவிட்டது. சுவர் விளம்பரம் எழுதும் பெயிண்டர்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுவர் விளம்பரத்தை தொடர்ந்து தேர்தலை நினைவுபடுத்தும் வகையில் பட்டி, தொட்டி, நகர் பகுதிகளில் சாலைகளின் குறுக்கே கட்சி தோரணங்கள், ஆங்காங்கே கட்சி பந்தல்கள் அமைக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. இந்த கட்சிபந்தல் அமைக்கவும், கட்சித் தோரணங்கள் அமைக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், பொதுக்கூட்டங்கள் நடக்கும் நாளன்று மட்டும் மைதான பகுதியில் தோரணங்கள் கட்டிக்கொள்ள போலீசார் அனுமதிக்கின்றனர். இதனால் கட்சித் தோரணங்கள் தயாரிப்பு, இதில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது, வாக்கு கேட்டு வேட்பாளர்கள் செல்லும்போது, வேட்பாளர்களுக்கு முன்பாக கரகாட்டக்காரர்கள் ஆடியபடி செல்வர். நாட்டுப்புற கலைஞர்கள், கரகாட்டக்காரர்களின் நக்கல், நையாண்டித்தனத்தை பார்க்கவே பொதுமக்கள் கூடுவர். அப்போது, அந்த பகுதிக்கு கட்சித் தொண்டர்களுடன் வரும் வேட்பாளர்கள் கூடியிருக்கும் கூட்டத்தினர், மத்தியில் வாக்கு கேட்பது வாடிக்கையாக இருந்தது. தற்போது, ஊர்வலங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதால் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் கரகாட்டக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
