அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ, கோவை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. ஆனால் 2 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என அதிமுக தரப்பில் கறாராக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அக்கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த மற்ற நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6 மாதங்களாக கோவை வடக்கு தொகுதியில் முகாமிட்டு நலத்திட்ட உதவி வழங்கல், தேர்தல் பணிகள் என செய்து வந்த வானதி சீனிவாசன், தற்போது மீண்டும் கோவை தெற்கு தொகுதிக்கே சென்று விடும் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. பெரியளவு அவருக்கு அறிமுகம் இல்லாத அத்தொகுதியில் அதிமுகவினர் ஒத்துழைப்பு இல்லாதது, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளர் வடவள்ளி சந்திரசேகர் போட்டியிட விரும்புவது உள்ளிட்டவையே மீண்டும் தொகுதி மாறுவதற்கு காரணமாக இருப்பதாக பாஜவினர் கூறுகின்றனர்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளாததால், மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அவர் முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். வானதியை தொடர்ந்து அண்ணாமலையும் தொகுதி மாற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணாமலை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவார் என பரவலாக பேச்சு அடிபட்ட நிலையில், அத்தொகுதியில் போட்டியிடும் முடிவை அவர் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் தொகுதியில் பாஜ மற்றும் அதிமுகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால், இத்தொகுதியை அவர் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், கவுண்டம்பாளையம் எம்எல்ஏவுமான பி.ஆர்.ஜி. அருண்குமார் அத்தொகுதியை விட்டுத்தர மறுக்கிறாராம். இதனால் அண்ணாமலையும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என குழம்பி தவிப்பதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த பாஜவினரே, அக்கா மற்றும் தம்பிக்கு வேற வேலையே இல்லையா? ஒரு தொகுதியை முடிவு செய்யாமல் ரவுண்டு அடித்து வருகின்றனர். அண்ணாமலை பிறந்த வீட்டிலேயேதான் (கரூர் மாவட்டத்தில்) தோற்று போனார். புகுந்த வீட்டிலேயே சீட் கிடைக்காமல் தற்போது திண்டாடு வருகிறார். அதே போல், கோவை தெற்கிலேயே வானதி நிற்காமல் வடக்குக்கு போய் வேலை செய்துவிட்டு, மீண்டும் இப்போது தெற்கு கேட்டு அடம் பிடிக்கிறார் என கிண்டலடிக்கின்றனர்.
