சென்னை: தங்கத்தின் விலை ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. அதுவும் காலை, மாலை என உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இன்னும் விலை கடுமையாக ஏறும் என்று பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 13ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. குறிப்பாக நேற்று காலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300க்கும், பவுனுக்கு ரூ.2160 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14400க்கும் விற்கப்பட்டது. அதேபோல நேற்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது.
நேற்று மாலையும் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்து ஆச்சரியத்தை அளித்தது. அதாவது நேற்று மாலை கிராமுக்கு ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.13900க்கும், பவுனுக்கு ரூ.3200 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,200க்கும் விற்கப்பட்டது. ஆனால், மாலையில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. தங்கம் விலை நேற்று காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5360 குறைந்தது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.9,760 குறைந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கடந்த 13ம் தேதி முதல் நேற்று வரை கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்று காலை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனைசெய்யப்படுகிறது. சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260க்கும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
