சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையில் உள்ள லிட்டில் இந்தியா வளாகத்தில் கோமளா விலாஸ் என்ற புகழ் பெற்ற பாரம்பரிய இந்திய சைவ உணவகம் இயங்கி வந்தது. கடந்த 1947ம் ஆண்டு முருகையா ராஜூவால் நிறுவப்பட்ட கோமளா விலாஸ் உணவகத்தை தற்போது அவரது பேரன் ராஜகுமார் குணசேகரன்(40) நடத்தி வந்தார்.
79 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பழமை வாய்ந்த இந்திய வம்சாவளி உணவகம், உணவில் வீட்டின் சுவை இருப்பதாலும், அந்த உணவகத்தின் பெயருக்காகவும் உள்ளூர் மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் உணவகமான இருந்து வந்தது. குறிப்பாக இந்த கோமளா விலாஸ் உணவகத்தில் வாழை இலைகளில் தென்னிந்திய உணவுகள் பரிமாறப்பட்டு வந்ததால் இதன் புகழ் பெரிதும் பரவியது. கடந்த 2015ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி மற்றும் அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் ஆகியோர் இந்த உணவகத்தில் உணவருந்தி உள்ளனர்.
சிங்கப்பூர் தேசிய பாரம்பரிய வாரியத்தால்(என்எச்பி) அங்கீகரிக்கப்பட்ட கோமளா விலாஸ் உணவகம் நடப்பாண்டு ஜனவரி 19ம் தேதி முதல் மூடப்பட்டிருப்பது அதன் வாடிக்கயைாளர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக உணவகம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு கடந்த 2 மாத காலமாக எந்தவொரு பராமரிப்பு பணிகளும் நடைபெறாததால், உணவகம் மீண்டும் திறக்கப்படுமா அல்லது நிரந்தரமாக மூடப்படுமா என்ற கேள்வி வாடிக்கையாளர்களிடையே எழுந்துள்ளது.
