திமுகவில் வேட்பாளர் தேர்வு 2வது நாளாக மும்முரம்; ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் முதல்வர் நேர்காணல்: தொகுதி நிலவரங்களை விரிவாக கேட்டறிந்தார்

சென்னை: திமுகவில் வேட்பாளர் தேர்வு மும்முரமடைந்து வரும் நிலையில், 2வது நாளான நேற்று போடிநாயக்கனூர் தொகுதிக்கு விருப்ப மனு அளித்திருந்த ஓபிஎஸ் உள்ளிட்டவர்களிடம் முதல்வர் நேர்காணல் நடத்தினார். அப்போது தொகுதி நிலவரங்கள் குறித்து விரிவாக முதல்வர் கேட்டறிந்தார். விருப்ப மனு அளித்​தவர்​களுக்​கான நேர்​காணல் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று முன்தினம் முதல் தொடங்​கியது. முதல் நாளில் புதுச்சேரி, காரைக்காலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. 120க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த வேட்பாளர்களை அழைத்து நேர்காணல் நடத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டிருக்கிறது.

முதல் நாளான நேற்று தென் மாவட்டங்களில் வரும் தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்த வேட்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்குட்பட்ட 22 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த வேட்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ் மற்றும் ஆவுடையப்பன், சுரேஷ்ராஜன், மனோஜ் பாண்டியன், ஞானதிரவியம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், புதுமுகங்கள் என சுமார் 750க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல் பிற்பகலில், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்குட்பட்ட 29 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்த வேட்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

நேற்றைய நேர்காணலில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதிகளும் இடம்பெற்றன. இதில் சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியும் அடங்கும். போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த ஓ.பன்னீர் செல்வமும் நேற்று நேர்கானலில் கலந்து ெகாண்டார். அவரிடம் முதல்வர் நேர்காணல் நடத்தினார். இதேபோல அவரின் மகன் ரவீந்திரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்திருந்தார். அவரிடமும் முதல்வர் நேர்காணல் செய்தார். மேலும், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூத்த நிர்வாகிகள் என 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி வாரியாக வேட்பாளர்களை அழைத்து தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது, வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது, இளைஞர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பொறுமையாக கேட்டறிந்தார்.

அப்போது சிலர் தங்கள் கருத்துகளையும் முன்வைத்ததாக சொல்லப்படுகிறது. அதில் சில தொகுதியில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என வேட்பாளர்கள் சிலர் சொன்னதாக தகவல்கள் வெளியாகின. வேட்பாளர் நேர்காணலின் போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர்(வடக்கு, மத்திய), நீலகிரி மாவட்ட தொகுதிகளுக்கும், மாலை கிருஷ்ணகிரி, திருப்பூர்(கிழக்கு, மேற்கு), திண்டுக்கல் மாவட்ட தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது. வருகிற 22ம்தேதி வரை திமுக வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது.

160க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திமுகவில் இணைந்தனர்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில், வழக்கறிஞர் டாக்டர் பி.எச்.மனோஜ்பாண்டியன் வழிகாட்டுதலின்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான பி.விஜயகுமார், டி.நந்தகுமார், ஏ.சத்யா, சி.ராகவன், ஏ.டி.நாகேந்திரன், எஸ்.குணசேகரன், எம்.பெருமாள், ஜி.ஜெய்சிங், முத்துகுமரன், எஸ்.பாலாஜி, ரோட்டரி என்.சிவக்குமார், நிக்சன், அதிசயா, டி.பவித்ரா, பி.லீனா உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அதிமுகவே இப்போது இல்லை- ஓபிஎஸ்
நேர்காணல் முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ்சிடம், ‘தேனி அதிமுக கோட்டை என்பது இப்போது மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா’ என நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ‘‘அதிமுகவே இப்போது இல்லை, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் விவரமாக தொகுதியின் நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லி கொண்டிருந்தோம்’’ என்றார்.

உழைப்போர் உரிமை இயக்கம் திமுகவுக்கு ஆதரவு
உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில நிர்வாகிகளான ஆலோசகர் எஸ்.குமாரசாமி, மாநில தலைவர் கு.பாரதி, பொதுச்செயலாளர் எஸ்.ஜானகிராமன், செயலாளர் கே.சுரேஷ், பொருளாளர் பி.நாகராஜ், மாவட்ட இணை அமைப்பாளர்கள் எஸ்.யுவராஜ், எம்.உமார்பாரூக் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை, மாநகராட்சியில் மீண்டும் பணியமர்த்திமைக்கு நன்றி தெரிவித்ததோடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தனர்.

Related Stories: