நடிகை மேட்டரில் சிக்கிய அதிமுக டாக்டருக்கு சீட்டா..?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ராமநாதபுரம் தொகுதியில் 3,10,165 பேர் வாக்காளர்களாக உள்ளனர். திமுக மாவட்ட செயலாளரான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. ராமநாதபுரம் தொகுதியில் இந்த முறை எப்படியாவது வெல்ல வேண்டுமென்ற துடிப்புடன் மாஜி அமைச்சரான டாக்டர் மணிகண்டனை களமிறக்க தலைமை முடிவு செய்துள்ளது. இது அதிமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. காரணம், கடந்த 2016 தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மணிகண்டனுக்கு, அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியும் தரப்பட்டது.

அந்த காலக்கட்டத்தில் தன்னுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்து ஏமாற்றி விட்டார். 3 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தினார். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்தோம் என மணிகண்டனுக்கு எதிராக பிரபல நடிகை பரபரப்பு புகார் கூறினார். இந்த புகாரின்பேரில் மணிகண்டன் மீது, பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கு சமரசம் ஆனாலும், ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் பலர் இவர் மீது அதிருப்தியில் உள்ளனர். பொதுஇடத்தில் ஒருமையில் பேசுவது, கட்சியினரை மதிப்பதில்லை என பல புகார்கள் இவர் மீது உள்ளன.

இதையடுத்து கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இவருக்கு ராமநாதபுரம் ெதாகுதியில் சீட் வழங்கப்படவில்லை. கூட்டணி சார்பில் பாஜ வேட்பாளராக குப்புராமு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மீண்டும் எடப்பாடியை சந்தித்து வாய்ப்பு கேட்டபோதுதான், அவர் சீட் தருவதாக உறுதி கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஓராண்டாக மணிகண்டனும் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். அதேநேரம் இத்தொகுதியை அதிமுகவிடம் இருந்து கைப்பற்றிவிட வேண்டும் என பாஜ முனைப்பு காட்டி வருகிறது.

கடந்த 2021 தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தோல்வியடைந்த பாஜ குப்புராமு, தற்போதைய மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், கரு.நாகராஜன் என ஒரு பட்டாளம் சீட்டு கேட்டு வருகின்றனர். இந்த 4 பேரையும் ஓவர் டேக் செய்து, முன்னாள் மாவட்ட தலைவராக இருந்த தரணி முருகேசன், தன்னையே வேட்பாளராக அறிவித்துக்கொண்டு, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஓம் சக்திநகர், வெளிப்பட்டிணம், கேணிக்கரை உள்ளிட்ட பல இடங்களில், ‘வாக்களீப்பீர்… தாமரை சின்னம், தரணி ஆர்.முருகேசன், பாஜ ராமநாதபுரம்’ என தாமரை படத்துடன் சுவர் விளம்பரம் மூலம் பிரசாரத்தையும் துவங்கி விட்டார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத டாக்டர் மணிகண்டன் தரப்பு பயங்கர ஷாக் ஆகியுள்ளது. மீண்டும் பாஜவுக்கு சீட் தருவதை விரும்பாத மணிகண்டன், இதுகுறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் எடப்பாடியும் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது மணிகண்டன் தரப்பில், ‘என்டிஏ கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் தான் பாஜவிற்கு இருக்கிறது என்றால், யாருக்கு எந்த தொகுதி என்ற அதிகாரமும் அவர்களே எடுத்துக்கொண்டால் நாம் எதற்கு’ என கேட்டுள்ளனர். மேலும் மணிகண்டனுக்கு சீட் கிடைத்து விட்டால் நமக்கு போட்டியாக வந்து விடுவார் என ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமியும் மவுன சாமியாக இருந்து வருகிறாராம்.

என்டிஏ கூட்டணியில் சீட் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே பாஜ, அதிமுக கோஷ்டி மோதல் உருவாகி விட்டதால் வேட்பாளர் யாராக இருந்தாலும் இரண்டு கட்சிக்குள்ளும் உள்ளடி வேலை உறுதியாக நடக்கும்… இதனால் எதிரணிக்குத்தான் கொண்டாட்டம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்…!

Related Stories: