விஜய் தன் பக்கத்திலேயே வைத்திருப்பது தற்கொலைக்கு சமம்; ஆதவ் அர்ஜூனா ஒரு விஷக்கிருமி: லாட்டரி அதிபர் மகன் மீண்டும் கடும் தாக்கு

லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ்சார்லஸ், தனது மைத்துனரும், தவெக கட்சியில் தேர்தல் பரப்புரை மேலாண்மை செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், ஜோஸ் சார்லஸ் மீண்டும் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றிருப்பது ஒரு ஸ்லீப்பர் செல் வேலையைச் செய்வதற்காகத்தான். விஜய் மது அருந்துபவர், எப்போதும் போதையிலேயே இருப்பார் என்ற ஒரு தவறான செய்தியை மக்களிடையே பரப்ப முயற்சிக்கிறார். சமீபத்தில் நல்லகண்ணு ஐயாவின் இறுதிச் சடங்குக்கு விஜய் வந்தபோதுகூட, அவர் மது வாடையுடன் வந்ததாக ஊடகங்கள் மூலம் ஒரு செய்தியைப் பரப்பத் திட்டமிட்டார். சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜூனா மதுபாட்டிலுடன் சிக்கியது ஒரு திட்டமிட்ட நாடகம். ஆதவ் அர்ஜுனா ஒரு விஷக் கிருமி போன்றவர். அவர் எந்த ஒரு அமைப்புக்குள் சென்றாலும், அதன் தலைவரையே காலி செய்துவிட்டு அந்த இடத்தை அடைய நினைப்பார். துரந்தர் திரைப்படத்தில் வருவதுபோல, ஒரு தேசத்துக்குள் ஊடுருவி அதைச் சிதைக்கும் உளவாளி போலச் செயல்படுகிறார்.

விஜய் இவரைத் தன் பக்கத்தில் வைத்திருப்பது ஒரு தற்கொலை முயற்சிக்குச் சமம். ஆதவ் அர்ஜுனா தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் பல அரசியல் குழப்பங்களை உண்டாக்கி வருவதாகவும், இவரைப் போன்ற ‘புற்றுநோய் செல்களை’ ஆரம்பத்திலேயே அகற்றாவிட்டால் அது கட்சிக்கு ஆபத்தாக முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சார்லசின் கட்சியான லட்சிய ஜனநாயக கட்சியை, தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வரக்கூடாது என சமீபத்தில் முதல்வர் ரங்கசாமியை புஸ்ஸி ஆனந்துடன் வந்த ஆதவ் சந்தித்து வலியுறுத்தினாராம். மேலும், சார்லஸ் திட்டத்தையும் ரங்கசாமியிடம் கூறியுள்ளாராம். இதனால் முதல்வர் ரங்கசாமி, லஜகவை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையை பாஜவுக்கு வைத்து வருகிறாராம். இதன் காரணமாக புதுவை பாஜ கூட்டணியில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு முழு காரணம் ஆதவ்வின் சதுரங்க ஆட்டம் தான் என கணக்கு போடுகிறார் சார்லஸ் என லஜகவின் முக்கிய பிரமுகர் கூறியுள்ளார்.

Related Stories: