சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு அதிமுக சார்பில் யாரும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லையாம். இந்த மாவட்டத்தில் ஏற்கனவே அதிமுக, அமமுக, சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என நான்கு அணியாக பிரிந்துள்ளனர். இதனால் வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என அதிமுகவினர் ஒதுங்கிவிட்டனர். வேண்டுமானால் சிவகங்கை தொகுதி சிட்டிங் எம்எல்ஏவும் அதிமுக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் மட்டும் அவரது தொகுதியில் போட்டியிடட்டும்; எங்களுக்கு தேர்தலில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை; இருக்கும் பணத்தையும் செலவிட தயாரில்லை என ஒரே மாதிரி கூறி வருகின்றனராம். ஆனால் செந்தில்நாதனோ, சிவகங்கை சட்டமன்ற தொகுதியை கூட்டணிக்கு வழங்கினால் கூட ஆட்சேபனை இல்லை என்ற மனநிலைக்கு வந்துள்ளாராம். மற்றவர்களுக்கு சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பிரச்னை என்றால், இவருக்கோ கூடுதலாக மாஜி அமைச்சர் பாஸ்கரனும் எதிராக கம்பை சுற்றிக் கொண்டிருக்கிறாராம். இதனால், தனது வெற்றி வாய்ப்பு பாதிக்கலாம் என முன்கூட்டியே சொல்லி வைத்துள்ளாராம்.
மேலும், கூட்டணியாக இருந்தாலும் அமமுகவினர் பெயரளவுக்கு வந்து நிற்பதோடு சரியாம். வேறு எந்தவிதமான ஒத்துழைப்பும் தருவதில்லையாம். இவர்கள் ேபாக சசிகலாவின் ஆதரவாளர்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு இங்கு இருக்கிறார்களாம். அவர்களும் எந்தவிதத்திலும் செந்தில்நாதனுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்களாம். இதனால் இம்முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் இவர்கள் அனைவரும் சேர்ந்து நம்மை தோற்கடித்து விடுவர், தனக்கு சிவகங்கை சரியாக வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் செந்தில்நாதன். தனது சொந்த தொகுதியான காரைக்குடி தொகுதியை கேட்பது, இல்லாவிட்டால் போட்டியிடாமல் ஒதுங்கிவிடுவது என்ற முடிவிற்கு வந்துவிட்டாராம். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள மற்ற கட்சியினரின் மனநிலையும் இவ்வாறுதான் உள்ளதாம்.
