7 மணி நேரம் ஆலோசனை ஜவ்வா இழுக்கும் ராமதாஸ்: யாருடன் கூட்டணி என்று இன்னும் 2 நாள் கழிச்சு சொல்றாராம்!

பாமக இரண்டாக உடைந்து உள்ள நிலையில் அன்புமணி தலைமையிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உள்ளது. ராமதாஸ் யாருடன் கூட்டணி செல்வார் என்று கேள்வி நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. நமக்கான வண்டி பக்கத்துல வந்துச்சு… இனிமே தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும் என்று கடந்த மாதம் இறுதியில் ராமதாஸ் தெரிவித்தார். ஆனால், இதுவரை அவர் முடிவை அறிவிக்கவில்லை. இதனால், தைலாபுரத்துக்கு வருவதை 2ம் கட்ட தலைவர்கள் நிறுத்திவிட்டனர். ராமதாஸ் அரசியல் நிலைப்பாட்டை எடுக்க காலம் தாழ்த்துவதால் வேறு கட்சிக்கு மாற 2ம் கட்ட தலைவர்கள் திட்டமிட்டனர். இதனால், நேற்று நிர்வாக குழு கூட்டம் கூடி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக அவசர நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. கவுரவ தலைவர் ஜிகே மணி, செயல்தலைவர்  காந்தி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், பேராசிரியர் தீரன், பரந்தாமன் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டனர். வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கூட்ட்த்துக்கு பின் ஜி.கே.மணி கூறுகையில், ‘‘பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் 7 மணி நேரம் இரண்டு அமர்வுகளாக நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. ஜனநாயக முறையில், ஒவ்வொருவரிடம் மனதில் பட்டதைத் தயக்கமில்லாமல் சொல்லுங்கள் என ராமதாஸ் கேட்டறிந்தார். குறிப்பாக வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

யாருடன் கூட்டணி என எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார். எந்தக் கூட்டணி, யாருடன் என்பது குறித்து இப்போது உறுதியாக சொல்ல முடியாது. நாங்கள் ஒன்றைச் சொல்லி, அது மக்களிடம் தவறாகப் போய்விடக்கூடாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். எனவே, சரியான தகவலை சொல்ல வேண்டும். எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை என்ற வருத்தம் ஏதுமில்லை. ன்னம் தொடர்பான சில நெருக்கடிகளால்தான் இந்தத் தாமதமே தவிர வேறொன்றுமில்லை. கூட்டணி குறித்த முழுமையான விபரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் பாமக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்’’ என்றார்.

பாதியில் சென்ற அருள் எம்எல்ஏ
நிர்வாக குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே சேலம் அருள் எம்எல்ஏ மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் ஆகியோர் பாதியில் சென்றுவிட்டனர். இதுகுறித்து ஜி.கே.மணியிடம் கேட்டபோது, மக.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை, காய்ச்சல் காரணமாக பாதியில் சென்றார். அருள் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார்’ என்றார்.

Related Stories: