சென்னை: நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதால் கரீப் பருவ நெல் கொள்முதல் இலக்கினை 23.50 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம் செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு ஒரு முக்கிய நெல் உற்பத்தி மாநிலம். 2025-26ம் ஆண்டின் கரீப் பருவத்தில் 20.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேட்டூர் அணை பாசனத்திற்காக உரிய நேரத்தில் திறக்கப்பட்டதுடன், சாதகமான தட்பவெப்ப நிலைகள் காரணமாக அதிக பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டதாலும், மேம்படுத்தப்பட்ட பயிர் மேலாண்மை முறைகள், சிறந்த பாசன கட்டமைப்பு வசதி மற்றும் விவசாயிகள் அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை பயிரிட்ட காரணத்தால், மாநிலத்தின் நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனில் வரலாற்று சிறப்புமிக்க நிலையை அடைந்துள்ளது.
இதனை முன்னறிந்து தான் 17.11.2025 அன்று பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில், அரிசி கொள்முதல் இலக்கை 16 லட்சம் மெட்ரிக் டன்களில் இருந்து, பருவ இறுதியில் கொள்முதல் செய்யப்படும் அளவிற்கேற்ப திருத்தி அமைக்குமாறு கோரியிருந்தேன். மேலும், நடப்பு பருவத்தில், 12.3.2026 தேதி நிலவரப்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும் இணைந்து 36.63 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளது. இது, 2024-25ம் ஆண்டு KMS பருவத்தின் இதே காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 24.17 லட்சம் மெட்ரிக் டன்னோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது.
நடப்பு பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 36.63 லட்சம் மெட்ரிக் டன் நெல்லில் இருந்து, சுமார் 24.91 லட்சம் மெட்ரிக் டன் அரிசி அரவை செய்யப்படும். இது, ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட 16 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் இலக்கானது தற்போதைய கொள்முதல் அளவின்படி ஏற்கனவே அடையப்பட்டு விட்டது. மேலும், நெல் கொள்முதல் சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 50,000 மெட்ரிக் டன் என்ற விகிதத்தில் தொடர்ந்து இருந்து வருவதால் எதிர்வரும் நாட்களிலும் இதேநிலை நீடிக்கலாம். அதன்படி, மொத்த நெல் கொள்முதல் அளவு 47.50 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டும்.
இதன் காரணமாக, சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் அரிசி அரவை செய்யப்பட்டு, பெறப்படும் நிலை ஏற்படும் என்று தனது முந்தைய கடிதத்தில் தான் ஏற்கனவே கோரியிருந்தபடி, கொள்முதல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்குவதை உறுதி செய்யவும், கரீப் பருவத்தில் 2025-26 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் மெட்ரிக் டன்களில் இருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைத்திடத் தேவையான உத்தரவுகளை வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
