பல லட்சம் பக்தர்கள் புடை சூழ இன்று வைகையில் இறங்குகிறார் அழகர்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று, வைகையாற்றில் அழகர் இறங்குகிறார். மதுரை சித்திரை திருவிழாவின் மகுடம் சூடும் நிகழ்வான, சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்வுக்காக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக அழகர்கோவில் மலையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு அழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார். கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் வாசலில் சிறப்பு பூஜைக்கு பின், அங்கிருந்து புறப்பட்டு, பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தர்ராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக இரவு முழுவதும் பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

நேற்று அதிகாலை மூன்றுமாவடிக்கு வந்த அழகரை, மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து புதூர், ரிசர்வ்லைன், தல்லாகுளம் பகுதிகளில் எதிர்சேவை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வந்தார். அங்கிருந்து நேற்றிரவு 11.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இன்று (மே 1) அதிகாலை 2.30 மணியளவில் வழியில் உள்ள தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வைகை ஆற்றை நோக்கி பயணிக்கிறார். அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

அவரை மதுரை தெற்குமாசி வீதி வீரராகவப்பெருமாள் வரவேற்கிறார். பல லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசிக்கின்றனர். இதற்கென மதுரை சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் துவங்கி வெளிநாட்டினரும் மதுரை வந்துள்ளனர். வைகை ஆற்றில் இருந்து புறப்படும் அழகருக்கு இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்பு வழி நெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் அழகர் இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை சென்றடைகிறார். அழகர் வைகையாற்றில் இறங்க உள்ளதையொட்டி, 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக ஏப். 26ம் தேதி பட்டாபிஷேகம், 27ம் தேதிக்கு விஜயம், 28ம் தேதி திருக்கல்யாணம், நேற்று முன்தினம் மாசி வீதிகளில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவிழாவின் 12ம் நாளான நேற்று சுவாமி – அம்மன், கோயிலுக்குள் திருக்கல்யாண பட்டயக்கணக்கர் லட்சுமணன் சிவராமன் மண்டகப்படியில் எழுந்தருளினர். பின்னர் உச்சிக்காலத்தில் தெய்வேந்திர பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனங்களில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் நான்கு மாசி வீதிகளில் வீதி உலா வந்தனர். இரவு கோயில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதனுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. திருக்கல்யாணத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து விடைபெற்று திருப்பரங்குன்றம் சென்றனர்.

Related Stories: