இஸ்ரேல், அமெரிக்கா தொடர் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் போரை நிறுத்த 3 நிபந்தனைகள் ஈரான் அதிரடி அறிவிப்பு

டெஹ்ரான்: இஸ்ரேல், அமெரிக்கா தொடர் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் போரை நிறுத்த 3 நிபந்தனைகளை ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் நீடித்து வருவதால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்த போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழித்தடத்தை ஈரான் மூடியது. அதுமட்டுமல்லாமல் ஹார்முஸ் நீரிணையில் எந்த கப்பல் வந்தாலும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அறிவித்தது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளை வைக்க ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் 16 கண்ணிவெடி போர்க்கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இத்தகவலை அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியில் 3 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இங்கிலாந்து ராணுவத்தால் நடத்தப்படும் ஐக்கிய ராஜ்ஜிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் நேற்று அறிவித்தது. இந்த தாக்குதலுக்கு எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், ஹார்முஸ் வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் தடை விதித்துள்ளதால் ஈரான் ராணுவமே தாக்குதல் நடத்தியிருக்கும் என நம்பப்படுகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

இந்த போர் இன்று 13வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியன், 3 நிபந்தனைகளை விதித்துள்ளார். மேலும், வளைகுடா அரபு நாடுகளுக்கு எதிரான டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், நேற்றிரவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிக்கவும், எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை தெஹ்ரான் விரும்புகிறது. ‘ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசியபோது, பிராந்தியத்தில் அமைதிக்கான ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன். சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பது, இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள்தான்’ என்றார்.

இதில், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள்” என்றால் என்ன என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை என்றாலும், அமைதியான அணுசக்தி திட்டத்தை உருவாக்குவதற்கான உரிமை அதற்கு உள்ளது என்று அந்த நாடு பலமுறை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த நாடு அணு ஆயுதத்தை தேடுவதாக குற்றம் சாட்டுகின்றன.

கமேனி மகன் காயம்
கடந்த மாதம் 28ல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடைய மனைவி, மருமகள், பேரக்குழந்தைகள் என பல உறவினர்களும் உயிரிழந்தனர். கமேனியின் 2வது மகனான மொஜ்தபா கமேனி, தற்போது நாட்டின் உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அவரும் தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பான இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, அவர் நலமுடன் இருப்பதாக தற்போதைய தலைவர் யூசுப் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

எங்களது தாக்குதலை ஈரான் எதிர்பார்க்கவில்லை; டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப், நிருபர்களிடம் கூறியதாவது:
அமெரிக்க ராணுவம் ஈரானை ஏறக்குறைய அழித்துவிட்டது. அது ஒரு கடினமான நாடு. அவர்களின் விமானப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அவர்களிடம் ரேடார் வசதி, விமான எதிர்ப்பு தளவாடங்கள் இல்லை. அவர்களிடம் இப்போது எதுவுமே இல்லை. இன்று சர்வதேச எரிசக்தி முகமை ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உலகின் பல்வேறு நாடுகளின் பெட்ரோலிய கிடங்குகளிலிருந்து, இதுவரை இல்லாத அளவாக 400 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விடுவிப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த, ‘ஆபரே ஷன் எபிக் ப்யூரி’ எனும் பெயரில் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொண்டோம். மிகவும் கொடூரமான சில மனிதர்களை ஒழித்து கட்டுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இது, 47 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எங்களது தாக்குதலை அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு
இந்த போருக்கு இடையே ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதையடுத்து ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் அதிக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்து ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஜெய்சங்கர், தனது சமூகவலைதள பக்கத்தில், ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அது நல்ல முறையில் அமைந்திருந்ததாகவும், மேற்காசிய மோதல் விவகாரம், அதுதொடர்பான ராஜீய விவகாரம், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை தலைவர் கல்லாஸுடனான பேச்சுவார்த்தை பயனுடையதாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் துறைமுகம் வந்த கப்பல் மீது ஈரான் தாக்குதல்; 2 இந்தியர்கள் பலி
இந்தபோருக்கு மத்தியில் தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக பயணித்தன. இந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிலும் தாய்லாந்தில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு வந்த சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கப்பலில் பயணித்த 23 பேரில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய தாக்குதல்களில் ஏற்கனவே இந்திய மாலுமிகள் உட்படப் பலர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச கடல் வழி போக்குவரத்தின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களை ஈரான் தவிர்க்க வேண்டும். அப்பாவி பொதுமக்களையும், வணிக கப்பல் ஊழியர்களையும் ஆபத்தில் தள்ளுவதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து பத்திரமாக நாடு திரும்பிய 177 இந்தியர்கள்
மத்திய கிழக்கில் போர் காரணமாக விமான போக்குவரத்து பாதிப்பால் இந்தியர்கள் உள்பட பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், முதல் கட்டமாக சுமார் 177 இந்தியர்கள் லெபனானில் இருந்து டெல்லிக்கு பத்திரமாக திரும்பி உள்ளனர் என பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் கத்தாரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு என 2 விமானங்கள் வர உள்ளன. இந்திய குடிமக்களின் பயண வசதிகளை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து வருகிறது.

ஈரானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் ஐநா தீர்மானம்; இந்தியா வழிமொழிந்தது
ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கியுள்ளது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதில், ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக” இருப்பதாகவும் ஐ.நா. கூறியுள்ளது. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு எதிரான ஈரான் இஸ்லாமிய குடியரசின் அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த கோரிய தீர்மானம் 13 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த தீர்மானத்தில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச வழித்தடத்தை மூடுவது, தடுப்பது அல்லது வேறுவிதமாக தலையிடுவதை நோக்கமாக கொண்ட ஈரான் இஸ்லாமிய குடியரசின் எந்தவொரு செயல்கள் அல்லது அச்சுறுத்தல்களை கண்டிக்கிறது. இந்த தீர்மானத்தை இந்தியா வழிமொழிந்துள்ளது.

100 டாலரை கடந்த கச்சா எண்ணெய்
ஈரான் – அமெரிக்க போரை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்த வார தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரை கடந்தது. இதையடுத்து, ஜி7 நாடுகள் தங்களின் அவசர கால கையிருப்பில் இருக்கும் எண்ணெய்களை வெளியிட முன்வந்ததால், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் குறைந்தது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃபா துறைமுகத்தில் இருந்து குஜராத் கண்ட்லா துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த மயூரி நரீ என்கிற சரக்கு கப்பல் ஹோர்முஸ் நீரிணையை நெருங்கியபோது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் பீப்பாய் 100 டாலரை கடந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: