துபாய்: வளைகுடா நாடுகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்து வரும் போர் 14 நாட்களை எட்டிய நிலையில், போரால் பாதிக்கப்பட்ட 7 வளைகுடா நாடுகளுக்கு இதுவரை ரூ. 11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டள்ளது. கடந்த பிப். 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இன்றுடன் 14வது நாளாக போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகன் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, இதுவரை ஈரானின் 5,500 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 60 போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீவிரமான போரினால் ஈரானில் இதுவரை 1,348 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன், குவைத், துபாய் மற்றும் ஈராக் ஆகிய 7 நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நூற்றுக்கணக்கான டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சுமார் 3,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் காமிகேஸ் ரக டிரோன்களைக் கொண்டு ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தப் போரால் வளைகுடா நாடுகள் முழுவதும் ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ளன.
நேற்றைய தினம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் அமெரிக்காவின் கேசி-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இது எதிரிகளின் தாக்குதலால் நடக்கவில்லை என்று அமெரிக்க ராணுவத் தலைமையகம் தெரிவித்தாலும், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோல், ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கூட்டு ராணுவத் தளம் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 6 பிரெஞ்சு வீரர்கள் காயமடைந்தனர். சவூதி அரேபியாவின் தலைநகர் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் வான்வெளிப் பகுதியில் ஏவுகணைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் குவைத் சர்வதேச விமான நிலையம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் இன்று சிறிய அளவிலான டிரோன் பாதிப்புகள் பதிவாகி உள்ளூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளம் சேதமடைந்துள்ளதால், அங்கிருக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பாக ஐரோப்பாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கத்தார் நாட்டின் எரிவாயு ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் உலக நாடுகளுக்கு எரிசக்தி தட்டுப்பாடும் ஒரு நீண்டகால திட்டம் சார்ந்த சவாலாக உருவாகியுள்ளது.
இந்த 14 நாள் போரினால் வளைகுடா நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பொருளாதார இழப்பு 120 பில்லியன் டாலர்களைத் (இந்திய ரூபாயில் 11,08,680 கோடி) தாண்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சவூதி, ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகளில் தினசரி எண்ணெய் உற்பத்தி 10 மில்லியன் பேரல் வரை குறைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலரிலிருந்து 93 டாலராக உயர்ந்துள்ளது. இது சுமார் 35 சதவீதம் விலை உயர்வாகும். போர் நீடித்தால் விலை 150 டாலரை எட்டும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வளைகுடா நாடுகளின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை இந்தப் போரினால் முடங்கியுள்ளது. எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் 4,000 தினசரி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு மட்டும் 34 பில்லியன் முதல் 56 பில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் போர் அபாயக் காப்பீட்டுத் தொகை 500 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வளைகுடா கடல் பகுதியில் சுமார் 3,200 கப்பல்கள் மேற்கொண்டு நகர முடியாமல் தவித்து வருகின்றன. குறைந்த விலை டிரோன்களைத் தடுத்து நிறுத்த வளைகுடா நாடுகள் பில்லியன் கணக்கில் நிதிச் சுமையைச் சந்தித்து வருகின்றன. பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் இதுவரை 8 முதல் 12 பில்லியன் டாலர் வரை செலவாகியுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் சேதமடைந்ததால் 15 முதல் 20 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. குவைத் பங்குச்சந்தை குறியீடு 10 சதவீதம் வரை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 25 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தினசரி 8 மில்லியன் பேரல் வரை குறைய வாய்ப்புள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போதைய போர் சூழல் நவீன வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது’ என்று தெரிவித்தனர். போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட இந்தியா போன்ற நாடுகள் ராஜீய ரீதியாகத் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
1 கோடி இந்தியர்களில் இதுவரை 1.5 லட்சம் பேர் மீட்பு;
ஏற்கனவே கடந்த 2025ம் ஆண்டு இதேபோன்ற ஒரு போர் பதற்றம் நிலவிய போது ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் மீட்புப்பணி நடத்தப்பட்டது. அப்போது ஈரான் நாட்டில் இருந்து 3,597 பேரும், இஸ்ரேலில் இருந்து 818 பேரும் என மொத்தம் 4,415 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அந்த பழைய சம்பவத்தின் அனுபவத்தைக் கொண்டு தற்போது லட்சக்கணக்கான இந்தியர்களை மீட்கும் பணியை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளில் தற்போது சுமார் 1 கோடி இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் 43 லட்சம் பேரும், சவூதி அரேபியாவில் 27 லட்சம் பேரும், குவைத்தில் 11 லட்சம் பேரும் உள்ள நிலையில், போரினால் வான்வெளி மூடப்பட்டதால் இவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் பெரும் தவிப்பில் உள்ளனர். ஓமன் மற்றும் கத்தாரில் தலா 8 லட்சம் பேரும், ஈராக்கில் 17,000 பேரும் பணியாற்றி வருகின்றனர். இன்றைய நிலவரப்படி, போர் தொடங்கிய 14 நாட்களில் சுமார் 1.5 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இதற்காக ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் 280 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களில் இதுவரை 1.5 லட்சம் மீட்டுள்ளனர். மற்றவர்கள் போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், அந்தந்த நாடுகளின் பாதுகாப்பில் உள்ளனர்.
