2 மாத ஊதியத்தை வழங்க கோரி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப். 12:  இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று மதிய உணவு இடைவேளையில் பி.எஸ்.என்.எல் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஏ (சஞ்சார் நிகாம்) மாவட்ட செயலாளர் சண்முகம், பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கடந்த ஜனவரி மாதம் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அந்தந்த அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல்.லிற்கு 4ஜி சேவையை உடனடியாக துவக்க வேண்டும். பி.எஸ்.என்.எல் கடன் பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை வழங்கிட வேண்டும். எப்.ஆர்.17(ஏ)ன் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். விஆர்எஸ் அமலாக்கப்பட்டதன் காரணமாக ஊழியர்களை தன்னிஷ்டப்படி மாற்றம் செய்ய கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: