கடமலை - மயிலை ஒன்றியத்தில் சித்த மருத்துவ நிலையங்களில் லேகியங்கள் திடீர் தட்டுப்பாடு

வருசநாடு, பிப்.11: தேனி மாவட்டத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சித்த மருத்துவ பிரிவுகள் செயல்படுகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவமனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அலோபதி மருத்துவத்துக்கு மாற்றாக சித்த மருத்துவம் ஆய்வு மருத்துவத்தின் ஒரு கிளையாக உள்ள சித்த மருத்துவமனை என்று இயற்கை மருத்துவமனை விரும்பக்கூடிய நோயாளிகள் மாற்றாக நினைத்து செல்கின்றனர். ஆனால், சுகாதாரத் துறையோ இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, சித்த மருத்துவத்தில் லேகியங்கள் பிரசித்தி பெற்றவை. சளி, இருமல், காய்ச்சல் மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய நெல்லிக்காய் லேகியம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பைகட்டி, வெள்ளைபடுதல் பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை நீக்கும் லேகியம் உள்ளிட்ட லேகியங்கள் கடந்த சில மாதங்களாக கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள சித்த மருத்துவமனை நிலையங்களில்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில்,`` சித்தமருத்துவம் இன்று பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் சில தினங்களாக அரசு மருத்துவமனைகளில் லேகியங்கள் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தட்டுப்பாடின்றி லேகியங்கள் கிடைக்க தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: