நன்றி குங்குமம் தோழி
சர்வதேச விருதை வென்ற இந்திய சினிமா
உலகளவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் கௌரவமான விருதுகளில் ஒன்று, ‘பாஃப்டா’. இந்த விருதை வென்ற படங்கள்தான் பெரும்பாலும் ஆஸ்கர் விருதையும் தட்டுகின்றன. அதனால் பாஃப்டாவை ஆஸ்கருக்கான நுழைவாயிலாகவும் பார்க்கின்றனர். சமீபத்தில் லண்டனில் 79-வது பாஃப்டா விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்தது.
இதில் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பப் படத்துக்கான பாஃப்டா விருதை ‘பூங்’ என்ற மணிப்பூரிப் படம் தட்டியிருப்பதுதான் இதில் ஹைலைட். ‘ஆர்கோ’, ‘லிலோ அண்ட் ஸ்டிச்’, ஜுடோபியா 2’ ஆகிய வசூலை அள்ளிய படங்களுடன் மோதி, இந்த விருதை தட்டியிருக்கிறது ‘பூங்’. மட்டுமல்ல, சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பப் படத்துக்கான பாஃப்டா விருதை வென்ற முதல் இந்தியப் படமும் ‘பூங்’தான். இப்படத்தின் இயக்குனர் லட்சுமிபிரியா தேவி.
முதல் பெண் டிரக் டிரைவர்
இன்று இமாச்சலப் பிரதேசத்தில் வாகனம் ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்காக விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்திருக்கிறது. காரணம், நேகா தாகூர் என்ற பெண். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்தவர் நேகா தாகூர். இவருடைய தந்தை டிரக் ஓட்டுநர் வேலை செய்து வந்தார். நன்றாகப் படித்து, விமானப் பணிப்பெண்ணுக்காக பயிற்சியையும் சிறப்பாக முடித்தார் நேகா. ஆனால், நேகாவுக்கோ டிரம் ஓட்டுநராக வேண்டும் என்பதுதான் விருப்பம்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் வரவே, அது நேகாவுக்குச் சாதகமாக அமைந்தது. ஆம்; வீட்டிலிருந்த நேகா, அப்பாவின் உதவியுடன் டிரக் ஓட்டப் பழகி, டிரக் ஓட்டுவதில் கைதேர்ந்தவராக மாறினார். மலை மற்றும் கரடு முரடான பாதைகளில் டிரக்கை லாவகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்தார் நேகா. தான் டிரக் ஓட்டும் வீடியோக்களை எல்லாம் தனது இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களில் பகிர்ந்தார். நேகாவின் புகழ் இமாச்சலப் பிரதேசம் தாண்டி, இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. மட்டுமல்ல, அவரது வீடியோக்கள் பல பெண்களுக்கு வாகனம் ஓட்டுகின்ற தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.
இளம் கார் ரேஸர்
சர்வதேச கார் பந்தய வீராங்கனைகளின் பட்டியலில் இடம்பிடித்ததோடு, பல சாதனைகளையும் படைத்து வருகிறார், அர்ஷி குப்தா. இரண்டு வருடங்களுக்கு முன்பு உலகிலேயே மிகச்சிறிய வயதில் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான உரிமம் பெற்ற வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார். இந்த உரிமத்தைப் பெறும்போது அர்ஷியின் வயது 7. சமீபத்தில் எஃப் 1 அகாடமியின் ‘டிஸ்கவர் யுவர் டிரைவ் (DYD)’ திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உலகின் மிக இளைய வீராங்கனை என்ற பெருமையையும் தன்வசமாக்கியிருக்கிறார்.
இப்போது அவரது வயது 9. மட்டுமல்ல, அர்ஷி குப்தாவின் பெயர், ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸி’லும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாத்தில் பிறந்தவர், அர்ஷி குப்தா. டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரல் பாட்டி
ஜம்மு காஷ்மீரில் உள்ள காத்துவா என்ற இடத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவரைப் பற்றித்தான் டுவிட்டரிலும், இன்ஸ்டாவிலும் ஹாட் டாக். போக்குவரத்து மிகுந்த ஒரு சாலையில், லாவகமாக காரை ஓட்டிச் செல்கிறார் அந்தப் பாட்டி. ஒரு தேர்ந்த கார் டிரைவரைப் போல அவர் கார் ஓட்டுகிறார். இந்த அரிய காட்சியை இன்ஸ்டா பிரபலம் ஒருவர் வீடியோவாக்கி, தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பாட்டி கார் ஓட்டுவதை லட்சக்கணக்கில் பார்த்து, அந்த வீடியோவையும், பாட்டியையும் வைரலாக்கிவிட்டனர். பாட்டியை நேர்காணல் செய்வதற்காக அவர் வீட்டை நோக்கி ஏராளமான பத்திரிகையாளர்கள் படையெடுத்திருக்கின்றனர். இப்போது அந்தப் பாட்டியின் வயது 90.
சோலோ டிராவலர்
காஷ்மீரைச் சேர்ந்த பெண் பயணி, சப்னம் பஷீர். காஷ்மீரில் உள்ள தொலை தூர கிராமங்களுக்குத் தனியாக பயணம் செய்து வருகிறார். அந்தக் கிராமங்களை பற்றி காஷ்மீரில் இருப்பவர்களுக்கே வெளியில் தெரியாது. இப்படி பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பயணம் செய்து, அந்தக் கிராமங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். இப்போது அந்தக் கிராமங்கள் எல்லாம் முக்கிய சுற்றுலா தலங்களாக மாறியிருக்கின்றன. இதன் மூலம் அக்கிராமங்களில் வசிப்பவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது. இத்தனைக்கும் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் கட்டுப்பாடான ஒரு சமூகத்தில் பிறந்தவர், சப்னம். சமூக கட்டுப்பாடுகளை கடந்து பயணங்களை மேற்கொண்டிருக்கும் சப்னத்துக்கு நாலாப்பக்கமிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
தொகுப்பு: த.சக்திவேல்
