சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 அதிகரித்தது. இதேபோல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்தது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றாலும் தங்கம் விலை உயர்ந்ததை பார்க்க முடிந்தது.
அன்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,800 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 26,200க்கு விற்பனையானது. அதே நேரத்தில் தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.7 ஆயிரம் வரை அதிகரித்தது. அதன் பிறகு 2ம் தேதியில் இருந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை குறைய தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.6 ஆயிரத்து 520 குறைந்து நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்து இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 19,600க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் நேற்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 3 லட்சத்துக்கும் விற்பனையானது.
