ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற மனு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

 

சென்னை, மார்ச் 11: ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி. நவாஸ் கனியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை திரும்பப் பெற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி தன்னை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விட ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தேர்தல் வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது, வழக்கை நிராகரிக்க கோரி நவாஸ்கனி மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், இரண்டு நாட்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அவர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி பன்னீர்செல்வம் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தேர்தல் வழக்கை வாபஸ் பெறக் கோரிய மனுவில், தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்த்து திருத்த மனு தாக்கல் செய்யுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: