சென்னை: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: முதல்வராக இருந்த ஓபிஎஸ் எப்படி திமுகவிற்கு செல்லலாம் என தமிழிசையும், ஜெயக்குமாரும் குதிக்கின்றனர். நாவலர் திமுகவை விட்டு விட்டு, அதிமுகவிற்கு வந்த போது இனித்தது. இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திமுகவுக்கு சென்றால் கசக்கிறதா?. ஏதோ புதிய முடிவை ஓபிஎஸ் எடுத்தாரா? நாவலர் திமுகவை விட்டு நீக்கப்படவில்லை. கருப்பு சிவப்பு கரை வேட்டி கட்டக்கூடாது என கோர்ட்டில் தடை வாங்கவில்லை. கடைசி நிமிடம் வரை பொதுச் செயலாளராகத்தான் இருந்தவர்.
ஆனால் ஓ.பி.எஸ். அப்படி அல்ல, நிராயுதபாணியாக நின்றவர். யாருக்காக போராடினாரோ அந்த ராமரையே பிடித்துக் கொண்டு ஓ.பி.எஸ்.சை தனிமையாக்கினீர்கள். வெளியில் செல்லும் போது ஜெயலலிதா படத்துடன் வலம் சென்ற ஓபிஎஸ் எப்படி திடீரென ஸ்டாலின் படத்தை போட்டு செல்ல மனம் வந்தது என வானதி கேட்டுள்ளார்.
ஆறு ஆண்டு காலம் கலைஞர் படத்தை போட்டு, எம்.பி. ஆக இருந்த கே.பி.ராமலிங்கம், எத்தனை ஆண்டுகாலம் ஜெயலலிதா படத்தை போட்டு திரிந்தார். குமரிஅனந்தன் கையைப் பிடித்து சத்தியமூர்த்தி பவனில் சுற்றிய தமிழிசை, சரத்குமார் படத்தை போட்டு திரிந்த கரு.நாகராஜன், ஒன்றிய அமைச்சர் வரை அழகு பார்த்த கலைஞரை விட்டு விட்டு மாநில துணைத்தலைவர் பதவிக்காக ஒரே நாளில் எப்படி காவிக் கொடிக்கு மாற முடிந்தது என நடிகர் நெப்போலியனை கேட்பீர்களா?. இத்தனை நாள் மூவர்ண கொடியுடன் சுற்றிய உங்களால் எப்படி இருவர்ண காவிக் கொடிக்கு மாற முடிந்தது என கராத்தே தியாகராஜனை பார்த்து கேட்பீர்களா?.
இத்தனை நாள் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், துணை சபாநாயகராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து, கலைஞரை சுமந்த உங்களால் எப்படி காவிக் கொடியை சுமக்க முடிகிறது என வி.பி.துரைசாமியிடம் கேட்பீர்களா?, உங்கள் பின்னாடி திரும்பிப் பாருங்கள், ஜெயலலிதாவிடம் அமைச்சராக இருந்து விட்டு, நிமிஷம் தோறும் ஜெயலலிதா படத்தை சட்டையில் வைத்திருந்த நயினார் நாகேந்திரன் எப்படி மோடி படத்தை மாற்றினார் என்று கேட்பீர்களா?.
பெற்று வளர்த்த அப்பனை தூக்கி எறிய எப்படி மனம் வந்தது என அன்புமணியை பார்த்து கேளுங்கள், நள்ளிரவில் தூக்கத்தில் கனவு கண்டு, மனைவியின் பேச்சைக் கேட்டு தன் படத்தையே தூக்கி எறிந்து விட்டு, மோடி படத்தை எப்படி போட மனம் வந்தது என சரத்குமாரிடம் கேட்பீர்களா?.
உலகத்திலேயே ஓ.பி.எஸ். தான் கட்சி மாறிவிட்டார் போல என வானதி, தமிழிசை கதறுவது தான் தவறு, தமிழகத்தில் கூரை இல்லாத கிராமங்களும் இல்லை, என் தலைவன் ஸ்டாலின் பெயரை அறியாத கிராமங்களும் இல்லை. வெல்லப்போது தளபதி ஸ்டாலினை தவிர வேறு எவருமில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
