கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கடத்தி கொன்ற மனைவி

கோவை: கோவை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, நண்பர்களுடன் காரில் கடத்தி, கொடூரமாக தாக்கி வாய்க்காலில் தள்ளி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர், சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுதிக்‌ஷன் (9) என்ற மகனும் யக்சிதாஸ்ரீ (6) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக தம்பதியர் பிரிந்து இருந்தனர். சரண்யா குழந்தைகளுடன் குமாரபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சதீஷ்குமார் அவ்வப்போது குமாரபாளையம் சென்று தனது குழந்தைகளை பார்த்து வருவது வழக்கம். இந்த நிலையில், சதீஷ்குமார் கடந்த 3-ம் தேதி மாயமானார். இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் நாதேகவுண்டன் பாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் காணாமல் போன சதீஷ்குமாரின் உடல் மிதந்தது.

இதையறிந்த போலீசார் சதீஷ்குமார் உடலை மீட்டு விசாரித்தனர். இதில், சரண்யாவின் பெரியம்மா மகளான சுகன்யாவின் கணவர் சென்ட்ரிங் தொழிலாளியான முருகன்(45) என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளாக சரண்யாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையறிந்த சதீஷ்குமார் மனைவி சரண்யா, முருகன் ஆகிய இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் ஆத்திரம் அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி மதியம் செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் முருகன் தனது நண்பர்கள் கோபிநாத் (30), சிவலிங்கம் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது சதீஷ்குமார் குமாரபாளையத்தில் உள்ள தனது குழந்தைகளைப் பார்க்க வந்தார். இத்தகவலை சரண்யா கள்ளக்காதலனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அன்று குமாரபாளையத்தில் இருந்து செஞ்சேரிமலைக்கு சதீஷ்குமார் அந்த வழியாக சென்றபோது முருகன்,கோபிநாத், சிவலிங்கம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் வழிமறித்து, வாகனத்தில் இருந்து இறக்கி தாக்கி காரில் கடத்தினர்.

பின்னர், பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி வாய்க்கால் பாலம் அருகே காரில் இருந்து சதீஷ்குமாரை இறக்கி வாய்க்கால் அருகே அமர்ந்து மது அருந்தினர். பின்பு 4 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி அங்குள்ள வாய்க்காலில் தள்ளினர். இதில் உயிரிழந்த சதீஷ்குமார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இவ்வவழக்கில் சரண்யா, கள்ளக்காதலன் முருகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: