ராமநாதபுரம்: ஆன்லைன் மோசடியில் பல கோடி ரூபாய் இழந்ததாக சிலர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சென்னையை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், மோசடி பணத்தை போலி வங்கி கணக்கு தொடங்கி பண பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது.
இதில் தொடர்புடைய ராமநாதபுரம் புல்லங்குடி பகுதியை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் பிரதீப், போகலூரை சேர்ந்த அப்ரின், சேது பாண்டியன், சல்மான் கான், சத்திரக்குடியை சேர்ந்த தவமுருகன், முகேஷ்வரன், பரமக்குடியைச் சேர்ந்த ஆசிக் சமூதீன் ஆகியோரது வீடுகளில் சென்னை சைபர் கிரைம் போலீசார் சோதனை நடத்தினர்.
இவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, 7 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து சென்னை சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
