பாலியல் வன்கொடுமையால் கர்ப்பம் சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 15 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளாகி 15 வயதில் கருவுற்ற சிறுமியின் வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், மைனர் சிறுமியின் 30 வார கருவை கலைக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, அந்த சிறுமியின் உடல் நிலையை ஆராய்ந்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

அதில்,’ சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது என்பது சாத்தியமற்றது, அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது அந்த சிறுமியின் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கும். மேலும் எதிர்காலத்தில் நிரந்தரமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக உடல் அளவிலும் பிரச்னைகள் ஏற்படும். எனவே உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தது. இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யாபாட்டி,’மைனர் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற முந்தைய உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் நான்கு வாரம் பொறுத்துக் கொண்டால் அந்த குழந்தை பிறந்து விடும்’ என்று தெரிவித்தார். இந்த கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்,’இது அப்பட்டமான குழந்தை பாலியல் வன்முறை, சிறுமியின் மன நிலையை புரிந்துகொள்ள வேண்டும். விருப்பமில்லா கருவை தொடர உத்தரவிட முடியாது.

கருவை மேலும் நான்கு வாரங்களுக்கு தொடர அனுமதிப்பது எந்த வகையில் நியாயமானது?. இந்த விசயத்தில் ஒரு 15 வயது சிறுமியால் தாய் என்ற பொறுப்பை தாங்க முடியுமா?. ’ என்று ஒன்றிய அரசு வழக்கறிஞருக்கு சரமாரி கேள்வியெழுப்பினார். இதையடுத்து அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்,’பிறக்கும் குழந்தையை வேண்டுமானால் தத்து கொடுக்கலாம். ஆனால் தற்போது மைனர் சிறுமிக்கு கருகலைப்பை செய்தால் அது நிரந்தரமாக அவளுடைய உடல் நலத்தை பாதிக்கும் ’ என்று மீண்டும் வலியுறுத்தி தெரிவித்தார்.

அதனையும் நிராகரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவில்,’மைனர் சிறுமிக்கு பாதுகாப்பாக கருவை கலைக்க மீண்டும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இதுகுறித்து ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தனிநபர் தான் முடிவு எடுக்க வேண்டுமே தவிர, மருத்துவமனையோ அல்லது அரசோ எந்தவித முடிவும் மேற்கொள்ளக் கூடாது.

எனவே மைனர் சிறுமியின் கருவை கலைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் சிறுமியின் பெற்றோரிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும்.

மேலும் மைனர் சிறுமி மற்றும் அவருடைய பெற்றோரிடம் நீங்கள் பேசி ஆலோசனை நடத்திய பின்னர் அதில் ஏதும் மாற்றம் என்பது தேவைப்பட்டால் இந்த நீதிமன்றத்தை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர்கள் அணுகலாமே தவிர, ஒன்றிய அரசோ அல்லது எய்ம்ஸ் நிர்வாகமோ அணுக வேண்டிய அவசியம் கிடையாது’ என்று திட்டவட்டமாக தெரிவித்த தலைமை நீதிபதி, மறுஆய்வு மனுவை நிராகரித்து அதனை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.

* சட்டத்தை திருத்துங்கள் ஒன்றிய அரசுக்கு அதிரடி
தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒன்றிய அரசுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதில், ‘‘கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தைத் திருத்துங்கள். பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் கர்ப்பம் ஏற்படும்போது, அதனை கலைக்க கால வரம்பு இருக்கக் கூடாது. சட்டம் என்பது நடைமுறைக்கு ஏற்றவாறும், மாறிவரும் காலத்திற்கு ஏற்றதாகவும் இயல்பானதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக இதுபோன்ற வழக்குகளை ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தும் இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: