புதுடெல்லி: தமிழ்நாட்டில் 39 சதவீத வாக்குகளுடன் மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய மற்றொரு புதிய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. அதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியே தொடரும் என கூறி உள்ளன.
இந்நிலையில், டுடேஸ் சாணக்கியா நிறுவனம் புதுச்சேரி தவிர 4 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை நேற்று வெளியிட்டது. இதில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 சதவீத வாக்குகளை பெற்று 125 தொகுதிகளுடன் (11 தொகுதிகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பெறலாம்) மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. தவெக 30 சதவீத வாக்குகளுடன் 63 இடங்களை பெற்று 2ம் இடத்தையும், அதிமுக கூட்டணி 27 சதவீத வாக்குகளுடன் 45 இடங்களை பெற்று 3ம் இடத்தையும் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோரின் 36 சதவீத வாக்குகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் 38 சதவீத வாக்குகளும், தாழ்த்தப்பட்டோரின் 49 சதவீத வாக்குகளும், முஸ்லிம்களின் 64 சதவீத வாக்குகளும், கிறிஸ்தவர்களின் 49 சதவீத வாக்குகளும் திமுகவுக்கு கிடைத்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. கேரளத்தில் 140 தொகுதிகளில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்பட்டுள்ளது.
இடதுசாரி கூட்டணி 64 இடங்களிலும் (9 தொகுதி அதிகம் அல்லது குறைவு), காங்கிரஸ் கூட்டணி 69 இடங்களிலும் (9 தொகுதி அதிகம் அல்லது குறைவு) வெல்லும் என்பதால் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி உள்ளது. பாஜ 7 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் பாஜ 192 தொகுதிகளையும் (11 அதிகம் அல்லது குறைவு), மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 100 இடங்களையும் (11 அதிகம் அல்லது குறைவு) கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை போல இந்த கருத்துக்கணிப்பிலும் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜ ஆட்சி அமையும் என கூறப்பட்டுள்ளது. இதே போல அசாமில் 126 தொகுதிகளில் பாஜ 102 இடங்களையும், காங்கிரஸ் 23 இடங்களையும் பெறும் என கூறி உள்ளது.
* தமிழ்நாடு கருத்துக்கணிப்பு முடிவு
கட்சிகள் தொகுதி
(9 + அல்லது -) சதவீதம்
(3 + அல்லது -)
திமுக 125 39%
அதிமுக 45 27%
தவெக 63 30%
மற்றவை 1 3%
