புதுடெல்லி: நகர்ப்புறங்களில் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வகையில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நகர்ப்புறங்களில் 21 நாட்களுக்கு பிறகு மட்டுமே அடுத்த காஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டது. கிராமப்புறங்களில் இது 45 நாட்களாக உள்ளது.
இந்நிலையில், சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகத்தில் இன்று முதல் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, சிலிண்டர் விநியோகிக்கும் போது பயனாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படும் 4 இலக்க ஓடிபி டெலிவரி செய்ய வருபவரிடம் சொன்னால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, குழாய்வழி சமையல் எரிவாயு (பிஎன்ஜி) இணைப்பு பெற்றவர்கள் மானிய விலை வீட்டு உபயோக எல்பிஜி இணைப்புகளையும் வைத்துள்ளார்களா என ஆய்வு செய்யும் பணியையும் பெட்ரோலிய அமைச்சகம் தொடங்கி இருக்கிறது. பிஎன்ஜி, எல்பிஜி இரு இணைப்பையும் வைத்திருக்க கடந்த மார்ச் 14ல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 43,000 பேர் தங்களின் எல்பிஜி இணைப்பை திரும்ப ஒப்படைத்ததாக அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
