பெங்களூரு: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி கண்டிப்பாக ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அசாமில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டதை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக கலபுர்கியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சில இடங்களில் தெளிவான முடிவை தெரிவிக்கின்றன.
ஆனால் சில முடிவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் திமுக கண்டிப்பாக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்கும். தமிழ்நாட்டில் கட்சி நிர்வாகிகளிடமும் பேசினேன். அதன்படி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைப்பது உறுதி. கேரளாவிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி பெரும்பான்மையைப் பெறும். அசாமில் காங்கிரஸ் எதிர்பார்த்த சீட்டுகள் கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
ஆனால் கருத்துக்கணிப்பில் கூறியதை விட அதிகமான தொகுதிகளில் கண்டிப்பாக காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். புதுச்சேரியிலும், பாஜ – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் போட்டியை அளிப்போம். மேற்கு வங்கத்தை பொறுத்தமட்டில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் மத்தியப் படைகளை நிறுத்தி பாஜ அடக்குமுறையையும் அச்சுறுத்தலையும் செய்தது.
அவ்வாறு செய்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸுக்கு ஒரு வலுவான போட்டியை அளிக்க பாஜ முயற்சித்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் முதல்முறையாக தனித்து நிற்கிறோம். அங்கு எங்கள் போட்டி என்பது கட்சியின் நலன் மற்றும் வளர்ச்சிக்கானது. இன்னும் 3 நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இப்போது தேவையில்லாமல் நிறைய பேச வேண்டியது கிடையாது. பொறுத்திருந்து தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம்’ என்றார்.
* கர்நாடகா முதல்வர் மாற்றம் இல்லை
கர்நாடகாவில் மே 4ம் தேதிக்கு பிறகு முதல்வர் மாற்றப்படலாம் என்று பேசப்பட்டு வரும் நிலையில், ‘இப்போதைக்கு முதல்வரை மாற்றும் திட்டம் இல்லை’ என்று மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதுதொடர்பாக பேசிய கார்கே, ‘ஊடகங்களும், அமைச்சர் பரமேஸ்வரும், உயர்மட்டத்தில் இருக்கும் சிலரும் நான் முதல்வரானால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்கள்.
ஆனால் விதியைவிட, எனது சித்தாந்தத்தின்படியும், இதுவரை கட்சிக்கு நான் ஆற்றிய சேவையின் அடிப்படையிலும் தான், என்னைப் பற்றிய முடிவுகளை சோனியா காந்தி எடுக்கிறார். மாநிலத்தில் முதல்வர் இருக்கிறார். இப்போதைக்கு முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அப்படி ஒரு மாற்றம் செய்ய வேண்டுமென்றால், சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் நானும் சேர்ந்து முடிவெடுப்போம். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும். பொறுத்திருப்போம்’ என்றார்.
