விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகளுக்கு கூடுதலாக ரூ.10,000 கட்டணம்: மே 15க்குள் செலுத்த உத்தரவு

புதுடெல்லி: விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகள் கூடுதலாக ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்த ஹஜ் குழு உத்தரவிட்டுள்ளது. ஈரான் போர் காரணமாக உலக அளவில் விமான எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள கடும் உயர்வு காரணமாக, இந்த ஆண்டு ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் வசூலிக்கப்படும் விமானக் கட்டணத்தை இந்திய ஹஜ் குழு ரூ.10,000 உயர்த்தியுள்ளது. எனினும், தீவிர பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, 2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்தின் விமானக் கட்டணத்தில் ஒருமுறை மட்டும் செய்யக்கூடிய திருத்தத்திற்குச் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய ஹஜ் குழு வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘திருத்தப்பட்ட இந்த விமானக் கட்டணத்தின்படி, பயணிகள் புறப்படும் இடம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பயணியும் கூடுதலாக 100 அமெரிக்க டாலர் தொகையைச் செலுத்த வேண்டும். 400 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்று விமான நிறுவனங்கள் விடுத்த தீவிர கோரிக்கைகளை, ஆராய்ந்த பிறகு கூடுதல் விமானக் கட்டணத் தொகையான ரூ.10,000-ஐ மே 15-க்குள் செலுத்த வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கை மேலும் கூறியுள்ளது.

Related Stories: