நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு அன்ன வாகனத்தில் அம்மன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசித்திருவிழா கடந்த பிப்.23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி அம்மான் பல்வேறு வாகங்களில் எழுந்தருளி நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதன்படி, நேற்றிரவு அன்ன வாகனத்தில் அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தந்தார்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்ததை தொடர்ந்து கோயிலிலிருந்து மின் ரதத்தில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் ஆங்காங்கே திரண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். விழா நாட்களில் பக்தர்கள் மாவிளக்கு, கரும்பு தொட்டில், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் விழா வரும் மார்ச் 10ம் தேதியும், மறுநாள் (11ம் தேதி) பூப்பல்லக்கிலும் நகர்வலம் வந்து திருவிழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, பரம்பரை பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
