அந்தியூரில் பரபரப்பு: எடப்பாடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அதிமுக பிளக்ஸ் போர்டுகள் கிழிப்பு

 

அந்தியூர்: அந்தியூர் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு இன்று மாலை 5 மணி அளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி பயணக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அந்தியூர், அத்தாணி கைகாட்டி பிரிவு, காட்டூர் மேடு, கருவாடடிப்புதூர், கீழ்வாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட முக்கிய பகுதியில் அதிமுக சார்பில், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.

இதனை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏக்கள் ரமணிதரன், இஎம்ஆர் ராஜா, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைசெயலாளர் முருகபிரசாத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளனர். இதில், குறிப்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ ரமணிதரன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் முருக பிரசாத் ஆகியோரின் பிளக்ஸ் போர்டுகள் மட்டும் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளது.

இதில் 20க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகள் கிழிக்கப்பட்டுள்ளன. இத்தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த அந்தியூர், ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பிரசாரத்திற்கு வர உள்ள நிலையில், அந்தியூர் பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: