மணப்பாறை: ஆவாரம்பட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் சீறிப்பாய்ந்தன. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவாரம்பட்டியில் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு புனித இஞ்ஞாசியார் ஆலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டத்திலிருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 வீரர்கள் கலந்து கொண்டனர். வீரர்கள், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
காலை 9 மணிக்கு போட்டியை தாசில்தார் சுந்தரபாண்டியன், டிஸ்பி காவியா கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக கோயில் களைகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு திருப்பலிக்கு பின் ஜல்லிக்கட்டு திடலுக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகளும், அடுத்தடுத்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. காளையர்கள் தலா 25 பிரிவாக பங்கேற்று காளைகளை அடக்கினர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களக்கு சைக்கிள், கட்டில், ரொக்கப் பரிசு, பாத்திரங்கள் உள்பட பல பரிசுகள் வழங்கப்பட்டது. மணப்பாறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
