திருமலை: முதல் மனைவியையும், அவரது அம்மாவையும் வெட்டிக்கொலை செய்த பைனான்சியரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சுப்பாராவ்பேட்டையைச் சேர்ந்தவர் சீதாராமராஜு, பைனான்சியர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த லதா(32) என்பவரும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் போக்சோ வழக்கில் சீதாராமராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் லதா, கணவரின் பைனான்ஸ் விவகாரங்களை கவனித்து வந்தார். ஜாமீனில் வந்த சீதாராமராஜுவுக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் குடிபோதையில் வந்தும் கடுமையாக தாக்கினாராம். இதனால் படுகாயம் அடைந்த லதா, சீதானகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். கணவன், மனைவி இருவருக்கும் தகராறு அதிகரித்ததால், ஓராண்டுக்கு முன் பிரிந்து விட்டனர். 3 குழந்தைகளையும் சீதாராமராஜுவே வளர்த்து வருகிறார்.
இதற்கிடையில் சீதாராமராஜு, வீட்டின் எதிரே உள்ள குமாரி என்பவரை கட்டாயப்படுத்தி சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டாராம். அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கணவரை பிரிந்து கோடிகேஷ்வரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த லதா, சமீபத்தில் தனது தாய் லட்சுமி (50) வீட்டுக்கு வந்தார். இதையறிந்த சீதாராமராஜு, குழந்தைகளை தன்னிடம் விட்டுவிட்டு பிரிந்து சென்று தனது முதல் மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கருதி கடும் ஆத்திரமடைந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் 3 பேருடன், லதா வீட்டிற்கு சென்ற சீதாராமராஜு, அங்கிருந்த அவரை கத்தியால் சரமாரி வெட்டியுள்ளார்.
லதாவின் அலறலைக் கேட்டு அவரது தாய் லட்சுமி ஓடி வந்து தடுக்க முயன்றார். இதனால் அவரையும் சீதாராமராஜு வெட்டியுள்ளார். இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். பின்னர் சீதாராமராஜு கோதாவரி ஆற்றில் கத்தியை வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செல்போன் சிக்னலை வைத்து சீதாராமராஜுவை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
