மது போதையில் வீடு புகுந்து கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்: அதிரடியாக சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் நடவடிக்கை

சென்னை: ராயப்பேட்டையில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணிடம், வீடு புகுந்து போதையில் பாலியல் தொந்தரவு கொடுத்த காவலரை போலீஸ் கமிஷனர் அருண் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராணி (32, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மீது, கள்ளச்சந்தையில் மதுபாட்டில் மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 3 வழக்குகள் ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இவர், தற்போது ரகசியமாக மது விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் சிலருக்கு மாதம்தோறும் மாமூல் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வரும் காவலர் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி இரவு காவலர் சூர்யா, ராணி வீட்டிற்கு சென்று மது விற்பனை செய்வதாக கூறி தனியாக சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது, தன் மீதுள்ள 3 வழக்குகளை ரத்து செய்ய காவலர் சூர்யாவிடம் ராணி வேண்டுகொள் விடுத்துள்ளார். அதற்கு சூர்யா உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், மது போதையில் காவலர் சூர்யா நேற்று முன்தினம் ராணி வீட்டிற்கு வந்து பழைய வழக்கு தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி சிறிது நேரம் பேசியுள்ளார். பின்னர் திடீரென ராணியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று உடைகளை கழற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ராணி, காவலர் சூர்யாவிடம் ‘தாகம் எடுக்கும் என்பதால் உங்களுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வருவதாக கூறி’ காவலர் சூர்யாவை அறையில் வைத்து பூட்டிவிட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் வீட்டின் படுக்கை அறையில் இருந்த காவலர் சூர்யாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது ராணி அருகில் இருந்தவர்கள் உதவியுடன், சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நான் மாதர் சங்க நிர்வாகிகள் உதவியுடன் போராட்டம் நடத்துவேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீஸ் கமிஷனர் அருண், கணவனை பிரிந்து தனியாக வசிக்கும் பெண்ணிடம் மது போதையில் தவறாக நடந்ததால், காவலர் சூர்யா மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் ஒழுங்கினமாக செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா கடந்த 2017ம் ஆண்ட தமிழ்நாடு காவல் துறையில் காவலராக தேர்வானார். பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி தற்போது ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: