திருச்சி பஞ்சப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சியில் வரும் 11ம் தேதி லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இந்தி திணிப்பு நடப்பதாக கூறுவது தேர்தல் அரசியல். கடந்த காலங்களில் இல்லாத வகையில் யுபிஎஸ்சி, துணை ராணுவப்படை தேர்வுகளை தமிழில் எழுத ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் திருக்குறளை பிரதமர் பரப்பி வருகிறார். தமிழின் தொன்மை குறித்து பேசி வருகிறார். 35க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்குறள் கலந்தாய்வு மையத்தை திறந்துள்ளார்.
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கையில் தாய் மொழியில் தான் படிக்க வேண்டும் என்று உள்ளது. தமிழகத்துக்கு இதுவரை ரூ.13 லட்சம் கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. விஜய் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். பொதுக்கூட்டங்கள் நடக்கும் போது தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம். தஞ்சாவூரில் நடந்த விபத்துக்கு தவெக கட்சிக்கும் பொறுப்பு உள்ளது. கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொண்டால் பிரச்னைகள் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
