நெல்லை: திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பமாக துணை இயக்குநர் சரவணபாபு, திருநெல்வேலி மண்டலத்தில் தீயணைப்புத் துறையின் தீ உரிமம் மற்றும் தடையிண்மைச்சான்று வழங்க பல தனியார் நிறுவனங்களிடமிருந்து தனது வங்கி கணக்கிற்கு நேரடியாக பல லட்சங்களை லஞ்சமாக பெற்றுள்ளது விசாரணையில் ஆதார பூர்வமாக தெரிய வந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் துணை இயக்குநர் சரவணபாபு கீழ் பணியாற்றும் பல தீயணைப்பு அதிகாரிகளும் மாதந்தோறும் பல ஆயிரக்கணக்கில் மாமூல் பணத்தினை அவரது வங்கி கணக்கிற்கு நேரடியாகவும், அவருடன் அன்றைய தினம் சிக்கிய 2ம் குற்றவாளி செந்தில்குமார் என்பவரது வங்கி கணக்கிற்கும் பெற்று அவரது வங்கி கணக்கிற்கும் பணத்தை மாற்றம் செய்துள்ளதும், தனது வசூல் ஏஜெண்டாக தீயணைப்பாளர் செந்தில் குமார் மற்றும் அவரது மனைவி பெயரில் பல கோடி மதிப்பிலான அசையா சொத்தினை வாங்கி அவரை பினாமியாக வைத்திருந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தனது நெருங்கிய உறவினர் பெயரில் பல கோடி அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
