மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இணைப்பு சேவை வழங்க 220 ஏசி மின்சார மினி பேருந்து கொள்முதல்: தமிழக அரசு அனுமதி

சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இணைப்பு சேவை வழங்க 220 ஏசி மின்சார மினி பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது விம்கோ நகர் – விமான நிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை வரை இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது சென்னை மெட்ரோவில் தினசரி சுமார் 3 முதல் 3.2 லட்சம் பயணிகள் வரை பயணம் செய்கின்றனர். இருப்பினும், பலருக்கு தங்கள் வீடுகளில் இருந்து மெட்ரோ நிலையங்களுக்கு செல்வதற்கும், நிலையங்களில் இருந்து அலுவலகங்களுக்கு செல்வதற்கும் முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், இப்பிரச்னைக்கு தீர்வாக ‘மெட்ரோ அட் தி டோர்ஸ்டெப்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இணைப்பு சேவையை வழங்க 220 குளிர் சாதன மின்சார மினி பேருந்துகள் முதற்கட்டமாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் உள்ள பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, மாநகர போக்குவரத்து கழகம் வாயிலாக, முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள், தனியார் ஐ.டி., நிறுவனங்களை இணைக்கும் வகையில் சுமார் 220 குளிர்சாதன மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக, திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், நங்கநல்லூர், பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை, விம்கோ நகர் மற்றும் விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 5 கி.மீ., துாரத்துக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த மினி பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை 5 நிமிட இடைவெளியில் ஒரு மினி பேருந்து சேவையாக இயக்கப்பட உள்ளது. இந்த மினி பேருந்துகான கட்டணம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. செப்டம்பர் முதல் ‘ஏசி’ மினி பேருந்துகள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன. 70 பேருந்துகள் மினி பேருந்துகள் 7 மீட்டர் நீளம், 2.2 மீட்டர் அகலம் கொண்டதாகவும், மீதமுள்ள 150 மினி பேருந்துகள் 5.5 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் அலகம் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளது.

இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட்டு, மினி பேருந்து தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த திட்டத்திற்காக மொத்தம் 220 மினி பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில் 19 பேர் அமர்ந்து செல்லக்கூடிய 70 சிறிய பேருந்துகளும், 12 பேர் அமரக்கூடிய 150 மைக்ரோ பேருந்துகளும் இடம்பெறும். இவை பெரும்பாலும் மின்சார வாகனங்களாக இருக்கும் என்பது சுற்றுச்சூழலுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

தற்போதுள்ள சிற்றுந்துகள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் நிலையில், இந்த புதிய பேருந்துகள் 5 நிமிட இடைவெளியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, மெட்ரோ நிர்வாகம் நேரடியாக சாலை போக்குவரத்து சேவைகளை வழங்க முடியாது என்பதால், இந்த பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலமாக இயக்கப்படும். இதற்கான வழித்தடங்களை திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைக்கும் பணிகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மேற்கொள்ளும்,’’ என்றனர்.

Related Stories: