இலங்கை அருகே ஈரான் கப்பல் மூழ்கடிப்பு ஆழ்கடல் மீன்பிடிக்கும் குமரி மீனவர்கள் அச்சம்: ஒன்றிய அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

நாகர்கோவில்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் சர்வதேசப் பதற்றம் தற்போது இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகில் எதிரொலித்துள்ளது. இலங்கையின் தெற்கு கடற்கரைப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானின் நவீன போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய அதிரடித் தாக்குதலில் அந்தக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சிக்காக விசாகப்பட்டினம் வந்திருந்த ஈரான் போர்க்கப்பல், மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் வைத்துத் தாக்கப்பட்டது.

கப்பலில் இருந்த 180 வீரர்களில் இதுவரை 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினர் நடத்திய மீட்புப் பணியில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 60 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர். இந்தத் தாக்குதலை அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் உறுதி செய்துள்ளார். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவால் நடத்தப்பட்ட முக்கியமான தாக்குதல் என்றும், நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோ மூலம் இந்தக் கப்பல் அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆழ்கடல் மீன் பிடிப்பிற்காக இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள சர்வதேச கடல் பகுதிகளுக்குச் செல்லும் குமரி மாவட்டம் உட்பட தமிழக மீனவர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், குறிப்பாக தூத்தூர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிலேயே ஆழ்கடல் மீன்பிடிப்பில் மிகவும் கைதேர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சுறா மற்றும் தூண்டில் மீன் வேட்டைக்காக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஏற்கனவே எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடுகள், கைது நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, தற்போது சர்வதேச வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல அஞ்சுகின்றனர். ‘கடல் பகுதியில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

போர் கப்பல்களே தாக்கப்படும் சூழலில் எங்களது சிறிய படகுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது’ என மீனவ அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அரசு இது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளதுடன், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. எனவே ஒன்றிய அரசு ஆழ்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

Related Stories: