ஓட்டல்களில் வேலை செய்த 9 குழந்தை தொழிலாளர் மீட்பு ஆபரேசன் ஸ்மைல் அதிரடி

திருச்சி, பிப்.10: திருச்சி மாநகரில் குழந்தை தொழிலாளர், காணாமல் போன குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் மற்றும் சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள் ஆகியோரை மீட்க ஆபரேசன் ஸ்மைல் என்ற சிறப்பு குழுவின் மூலம் மீட்டு அக்குழந்தைகளுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு அளிக்க திருச்சி மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் என்பதால் ஆபரேசன் ஸ்மைல் சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டு மத்திய பஸ் நிலையத்தில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து திருச்சி மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சிந்துநதி தலைமையில் பாலக்கரை, கன்டோன்மென்ட் ஆகிய பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் ஓட்டல்களில் வேலை செய்த 9 சிறுவர்களை மீட்டு அவர்களுக்கு மதிய உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி திருச்சி கலையரங்கம் திரையரங்க வளாகத்தில் உள்ள குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். இதுவரை மாநகர ஆபரேசன் ஸ்மைல் சார்பில் 30 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: