வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் கோயில் பாடை காவடி திருவிழா மார்ச் 21ல் நடத்த முடிவு

வலங்கைமான், பிப்.10: வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெரு மகா மாரியம்மன் கோயில் பாடை காவடி திருவிழா வரும் மார்ச் 21ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. சக்தி ஸ்தலம் பக்தர்களால் என்று அழைக்கப்படும் இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த பாடை காவடி திருவிழா கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் காரணமாக அரசின் உத்தரவுக்கு இணங்க நடைபெறவில்லை. மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறக்கூடிய தெப்பத் திருவிழாவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு மகா மாரியம்மன் கோயிலில் பாடை காவடி திருவிழா நடைபெறுவதற்கான தேதி குறிக்கும் நிகழ்ச்சி ஆலய வளாகத்தில் செயல் அலுவலர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. வரும் மார்ச் 5ம் தேதி பூச்சொரிதல் விழாவும், 7, 14ம் தேதிகளில் முதல், 2ம் காப்பு கட்டுதல், முக்கிய நிகழ்வான பாடை காவடி திருவிழா மார்ச் 21ல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 28ம் தேதி புஷ்ப பல்லக்கு, ஏப்.4ல் ஞாயிறு விழா, 11ம் தேதி கடை ஞாயிறு விழாவும் நடத்தப்படுகிறது. இக்கூட்ட நிகழ்ச்சியில் தக்கார் தமிழ்மணி, கோயில் நிர்வாகி சீனிவாசன், தலைமை பூசாரி செல்வம் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: