115 – பத்ர ப்ரியா
116 – பத்ர மூர்த்தி
இதற்கு முன்பு நாம் பவாநீ, பாவநா கம்யா, பவாரண்ய குடாரிகா… என்று இந்த மூன்று நாமங்களையும் இந்த பவ சப்தத்திலேயே பார்த்துக் கொண்டு வந்தோம்.இப்போது இந்த இரண்டு நாமங்களும் பத்ர ப்ரியா, பத்ர மூர்த்தி; என்று வருகிறது. இவை இரண்டும் எப்படி பவ சப்தத்தோடு தொடர்புடையதாக வருகின்றது.பத்ர ப்ரியா என்கிற நாமத்திற்கு மங்களத்தில் ப்ரியமுள்ளவள் என்று அர்த்தம். இரண்டாவதாக பத்ர மூர்த்தி என்று வருகின்றதல்லவா…. இதற்கு மங்களமே வடிவானவள் என்று அர்த்தம். அப்போது இந்த இரண்டு நாமங்களிலேயும் பொதுவாக இருக்கக் கூடியது இந்த பத்ர சப்தம்.இந்த வார்த்தையைப்பற்றி சிந்தித்து விட்டு, இந்த நாமாக்களினுடைய உள்ளர்த்தம் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.பத்ரம் என்கிற வார்த்தை மிக முக்கியமானதாகும்.
சில வார்த்தைகள் வேதத்தில் இடம் பெற்றிருக்கும். வேதப் பிரசித்தமான சில வார்த்தைகள் இருக்கிறது. இந்த பத்ரமென்கிற வார்த்தையும் அப்படிப்பட்டதுதான். ஏனெனில், வேதத்தில் வரக்கூடிய ஷாந்தி மந்திரம் ‘‘பத்ரம் கர்ணேபி ஸ்ருணாயாம தேவ: ’’ என்று தொடங்கும். எனவே, இந்த பத்ரம் என்கிற வார்த்தை வேதத்தில் ஷாந்தி மந்திரத்திலேயே இருக்கிறது. பொதுவாக அதர்வ வேதத்திற்குரிய சாந்தி மந்திரம் என்று சொல்லுவோம். ஆனால், கிருஷ்ண யஜூர் வேத பாராயணத்திலும் கூட அதைச் சொல்வது வழக்கமாக உள்ளது.அதுமட்டுமில்லாமல், நரசிம்ம மந்திரத்தை விளக்கும்போது, உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் என்கிற மந்திரத்தை விவரிக்கும்போது, இந்த பத்ரம் என்கிற வார்த்தையைப்பற்றிய விவரத்தை உபநிஷதமே சொல்கிறது. ஏனெனில், அந்த நரசிம்ம மந்திரத்தில் பத்ரம் என்கிற வார்த்தை வரும். ‘‘ ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்’’ என்று வரும். அதனால், இது உயர்ந்த வார்த்தையாக கருதப்படுகின்றது.
அந்த ஷாந்தி மந்திரமானது என்ன சொல்லுமெனில், எங்கள் காதுகள் மங்களமானவற்றை கேட்கட்டும். அதற்கு தேவர்கள் அருள்புரியட்டும் என்றுதான் ஷாந்தி மந்திரமே ஆரம்பமாகும். இப்படியெல்லாம் வேதத்தில் சொல்லப்பட்ட அந்த வார்த்தை. உபநிஷதத்தில் விவரிக்கப்பட்ட அந்த வார்த்தை.சரி, இந்த இரண்டு வார்த்தைகளும் நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறது?பத்ரப்ரியா என்றால் மங்களத்தில் பிரியமுள்ளவள். அவள் ஏன் மந்திரத்தில் பிரிய முடையவளாக இருக்க வேண்டும். அம்பாள் ஏன் மங்களத்தில் பிரியமுடையவளாக இருக்க வேண்டும்.இதை நாம் இரண்டு வகையாகப் பார்க்கலாம்.
பத்ரம் என்றால் மங்களம் என்று பார்த்தோம். மேலும், இந்த மங்களம் என்கிற வார்த்தை யாரைக் குறிக்கும்.மங்களத்திற்கு இன்னொரு வார்த்தை ஷிவம். ஷிவேதி மங்களம். ஷிவம்தான் மங்களம் என்றுதான் சாஸ்திரம் சொல்கிறது. எனவே, பத்ரப்பிரியா என்றால் ஷிவத்தை விரும்புபவள் என்று அர்த்தம்.ஷிவம் சக்தியையும், சக்தி ஷிவத்தையும் விரும்புவது என்பது எப்போதுமான விஷயமாகும். ஆனால், எதற்காக அம்பிகை மங்களத்தை விரும்புகிறாள். இங்கு நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.குழந்தை நிலையில் நாம் ஒரு விஷயத்தை விரும்புகிறோம் என்பது வேறு. ஒரு தாயார் ஒரு விஷயத்தை விரும்புகிறாள் எனில், அந்தப் பொருள் அந்த குழந்தைக்கு விருப்பமானதாக இருக்கும். அதைத்தான் உலக வழக்கத்திலேயே பார்க்கிறோமல்லவா? உலக வழக்கத்தில் பார்க்கக் கூடிய விஷயம்தானே இது. ஒரு தாயானவள் அவர்களுக்காக வாங்குவதை விட அவர்களின் குழந்தைகளுக்காகத்தான் வாங்குவார்கள்.
எனவே, நமக்கு மங்களத்தையே தர வேண்டும். நமக்கு மங்களமே தேவை. நமக்கு மங்களத்தை கொடுக்கக் கூடிய நிலையில் அவளாக இருப்பதால், அவள் நமக்காக மங்களத்தை விரும்புகிறாள். அவள் நமக்காக பத்ரப் பிரியாவாக இருக்கிறாள். மங்களத்தை எதற்காக விரும்புகிறாளெனில் நமக்காக விரும்புகிறாள்.எப்படி பவாநீ… என்கிற நாமத்தில் அம்பாளானவள் மத்தியஸ்தமாக இருந்து, ஒரு பக்கம் ஷிவத்தையும் இன்னொரு பக்கம் ஜீவனையும் ஒரே நேரத்தில் கடாட்சிக்கிறாள் என்று பார்த்தோமோ! அதேபோல இந்த நாமத்திலேயும், ஒரு பக்கம் ஷிவத்தை விரும்புகிறாள். அந்த ஷிவத்தை விரும்புவதற்கு காரணமே நமக்காகத்தான். நம் சொரூபத்தை ஷிவமாக்க வேண்டுமென்பதற்காகவே விரும்புகிறாள். நம்மை மங்களமாக்க வேண்டுமென்பதற்காகவே ஷிவத்தை விரும்புகிறாள்.இதற்கு அடுத்த நாமமானது பத்ர மூர்த்தி என்பதாகும்.
இதற்கு முந்தைய நாமாவான பத்ர ப்ரியா என்று சொன்னவுடனே, நமக்கு என்ன தோன்றும். அம்பாள் மங்களத்தை விரும்புகிறாளெனில், மங்களம் என்பது அம்பாளைவிட வேறுபட்ட பொருளாக அல்லவா இருக்கிறது. அம்மா ஒரு குழந்தைக்கு உடை வாங்கிக் தருகிறாள். ஆனால், அம்மா வேறு. குழந்தை வேறு. உடை வேறு. அம்மாவினுடைய அன்பானது உடை வழியாக வருகிறது.ஆனால், இங்கு வசின்யாதி வாக் தேவதைகள் இந்தமாதிரி எந்த சந்தேகத்திற்கும் இடமே கொடுக்காமல், அடுத்த நாமாவிலேயே ஒரு விஷயத்தைப் போடுகிறார்கள். அவள் தன்னிலிருந்து வேறானது எதையோ விரும்புகிறாள் என்று நினைத்து விடாதே. ஏனெனில், அவளால் தன்னிலிருந்து எதையுமே பார்க்க முடியாது. அவள் விரும்புவது எல்லாமே தன்னைத்தான்.
அவள் சிவத்தை விரும்புகிறாளா… அவளே சிவமாக இருக்கிறாள். எவள் மங்களத்தை விரும்புகிறாளா அவளே மங்களமாக இருக்கிறாள். அவள் நம்மை விரும்புகிறாளா அவள் நாமாகவே இருக்கிறோம். அவளேதான் நாமாக இருக்கிறாள்.தேவி மாகாத்மியத்தில் அம்பாள் ஒரு வாக்கியம் சொல்லுவாள். அந்த வாக்கியத்தை நினைவுபடுத்தும் விதமாக, இந்த இடத்தில் வசின்யாதி வாக் தேவதைகள் நமக்கொரு நாமத்தை கொடுக்கிறார்கள். பத்ரமூர்த்தி என்பதாகும்.நீங்கள் மங்களம் என்று எதையெல்லாம் நினைக்கிறாயோ, நான் சிவத்தை மங்களமாக பார்க்கிறேன். அவள்தான் சிவமாக இருக்கிறாள். நான் அம்பாளால் படைக்கப்பட்ட இந்த இயற்கையை மங்களமாக பார்க்கிறேன். அவள்தான் இங்கு மங்களமாக, அவள்தான் இங்கு இயற்கையாக இருக்கிறாள். நான் எனக்குள் இருக்கின்ற அந்தர்யாமியை மங்களமாக பார்க்கிறேன். அவள்தான் எனக்குள்ளாக அந்தர்யாமியாக ஆத்மாவாக இருக்கிறாள்.அவள் மங்களத்தை விரும்புகிறாள் என்கிற முதல் நாமா மூலமாக, அவள் வேறு. அந்த மங்களமான பொருள் வேறு என்கிற அந்த சந்தேகத்தை இப்படி அடுத்த நாமாவிலேயே வாக்தேவதைகள் பத்ர மூர்த்தி என்று சொல்லி நிவர்த்தி செய்து விடுகிறார்கள். இன்னும் கேட்டால் அவள் எதை விரும்பினாலும் சரிதான், அது தன்னைத் தவிர வேறு இல்லை. ஏனெனில், இருப்பதெல்லாம் அவளைத்தவிர வேறு எதுவும் இல்லை.
அப்போது பத்ரப் பிரியா என்றால் மங்களத்தை விரும்புகிறாள். அடுத்தநாமாவான பத்ர மூர்த்தி. அவளே மங்கள வடிவாய் இருக்கிறாள். அப்போது அவள் தன்னைத்தானே விரும்புகிறாள். அவள் அப்போது நம்மீது வைக்கக் கூடிய விருப்பமானது, தன்னைத்தானே விரும்பும் விருப்பமே ஆகும். அதுவே நம் மீதும் வைக்கும் விருப்பமும் ஆகும். ஏனெனில், நாமும் அவளே என்பதுதான் இதற்குப் பொருள். இருப்பதிலேயே highest form பக்தியே இதுதான்.ரமண பகவான் அடிக்கடி ஒன்று சொல்லுவார்.‘‘நீ உன் மீது வைக்கும் பிரியத்தினாலேயே… மற்றோரிடமும் பிரியத்தோடு இருக்கிறாய்’’ என்பார்.பாபாவிடம் பலர் அடிக்கடி இப்படி கேட்பார்கள்….‘‘சுவாமி எங்களின் மீது இவ்வளவு கருணையோடு இவ்வளவு பிரியத்தோடு இருக்கிறீர்களே…. தன்னலமற்ற எந்தவித தடைகளும் இல்லாமல் நீங்கள், un conditional love ஆக இருக்கிறீர்களே’’ என்று கேட்கிறார்கள்.
‘‘அப்பா… நீ வெளியில் பார்த்துவிட்டு இப்படி சொல்கிறாய். ஆனால், நீ நினைப்பதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். நான் உங்களின் மீது பிரியத்தோடு இருக்கிறேன் என்று சொல்கிறாய். ஆனால், நான் அப்படி இல்லை. என்னைத்தவிர வேறு யாருமே இல்லையே. நான் என் மீது பிரியத்தோடு இருக்கிறேன். ஏனெனில், நீங்கள் எல்லோருமே எனக்குள்ளாக இருப்பதால், அந்தப் பிரியம் உங்களிடத்தில் வெளிப்படுகிறது. நீங்கள்தான் என்னையும் உங்களையும் வேறு படுத்திப் பார்க்கிறீர்கள். ஆனால், நானோ உங்களையும் என்னையும் எப்போதும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.’’ என்றார்.அம்பாள் இதையேதான் தேவிமகாத்மியத்தில் நான் ஒருத்தி மட்டுமே இருக்கிறேன். என்னைத் தவிர வேறு எதுவும், எவரும் இல்லை என்கிறாள்.மேலே சொன்ன விளக்கம்தான் பத்ர மூர்த்தி.
மங்களத்தை அவள் விரும்புகிறாள். அவளே மங்கள வடிவாய் இருக்கிறாள்.ஒரு அம்மா உடையோ அல்லது பொருளோ வாங்கிக் கொடுக்கும்போது குழந்தையானது உடையை அணிந்து கொள்ளும். அல்லது விளையாட்டுப் பொருளோடு விளையாடும். ஆனால், கொஞ்ச நேரம் கழித்து, எல்லாவற்றையும் ஓரமாக வந்து வைத்துவிட்டு, அம்மாவிடம் மடியில் வந்து அமர்ந்து கொள்ளும். அந்த உடை மூலமாக வந்த அம்மாவின் அன்பே இங்கு முக்கியம். அம்மாவே முக்கியம். உயர்ந்த அத்வைத நிலையில் நான் வேறு; நீ வேறு என்கிற நிலையில்லாது இருப்பதே உயர்ந்த பக்தியாகும். பத்ரப் பிரியா என்று துவைதத்தை காட்டிக் கொடுக்கிறாள். பத்ர மூர்த்தி என்று அத்வைத பாவனையில் காண்பித்துக்
கொடுக்கிறாள்.
அம்பாள் மங்களமானதை கொடுத்தாலும், அந்த மங்களமான அம்பாள்தான் பெரிய பரிசாகும். அதுவே நிரந்தர வஸ்துவாகும். அவளே மங்கள வடிவினளாக இருக்கிறாள்.இந்த இரண்டு நாமங்களுக்கும் நாமத்திற்கான கோயிலாக கும்பகோணத்தில் இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் கோயிலைச் சொல்லலாம். இங்குள்ள அம்பாளின் திருப்பெயரே மங்களாம்பிகை ஆகும். இங்கு அம்பாள் மந்திர பீடேஸ்வரியாக விளங்குகிறாள். மங்களம் என்கிற ஆதிகும்பேஸ்வரரை விரும்பும் பத்ரப் பிரியாவாக இருக்கிறாள். அந்த மங்களங்களையெல்லாம் கொடுக்கக் கூடிய மங்களாம்பிகையாக இருக்கிறாள். அவளே பத்ர மூர்த்தி என்கிற மங்களாம்பிகையாக இருக்கிறாள்.
(சுழலும்…)
