சர்வீஸ் சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்கள்

காரிமங்கலம், மார்ச் 3: காரிமங்கலம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலை பணிக்காக போடப்பட்ட ஜல்லிக் கற்கள் சிதறி கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், அகரம் பிரிவு ரோடு, கெரகோடஅள்ளி பிரிவு ரோடு பகுதிகளில் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்த பகுதிகளில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருச்சியை சேர்ந்த நிறுவனம் டெண்டர் எடுத்து, கடந்த ஆண்டில் பணிகளை தொடங்கியது.

சுமார் 10 மாதங்கள் ஆகியும், பணிகள் சீரான முறையில் நடக்கவில்லை. இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்ட நிலையில், சாலையின் இரு புறங்களும் தோண்டப்பட்ட குழிகள் மற்றும் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து செல்லும் நிலை உள்ளது. தற்போது, அகரம் பிரிவு ரோடு மற்றும் கெரகோடஅள்ளி பகுதிகளில், சிமெண்ட் கலந்த ஜல்லிக்கற்கள் சிதறி கிடைக்கிறது. ஜல்லிக்கற்கள் கொட்டி பல மாதங்கள் ஆகியும், பணிகள் நடக்காததால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், இப்பகுதியில் விபத்துகள் நடப்பதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: