ஜோலார்பேட்டை : விடுமுறை தினமான நேற்று ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் ஏலகிரி மலை நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு, எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சனி, ஞாயிறு விடுமுறை காரணமாக நேற்று கர்நாடக, கேரளம், பாண்டிச்சேரி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனர்.இவர்கள் ஏலகிரி மலையின் 14 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பார்வை மையங்களில் மலை உச்சி பகுதியில் இருந்து பறந்து விரிந்த சம தளங்களை கண்டு ரசித்தனர்.
அதேபோல் இயற்கையை ரசித்து ஆங்காங்கே குடும்பம் குடும்பமாக போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.அதேபோல் ஏலகிரி மலை படகு துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, முருகன் கோயில், நிலாவூர் படகு துறை, கதவு நாச்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், தனியார் பொழுதுபோக்கு கூடங்களையும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
அதன்படி, படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும், சிறுவர் பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி விளையாடியும் மகிழ்ந்தனர். அதேபோல் இயற்கை பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்று, பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்கள், சாக்லேட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் வாங்கி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஏலகிரி மலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை சீர் செய்தும், போக்குவரத்தை சரி செய்தும், சட்ட விரோத செயலில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
