பிரதமர் மோடி சென்னை வருகை மதுரையில் கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சு: பொதுக்கூட்டத்தில் எடப்பாடி உள்ளிட்ட கூட்டணிக்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். மதுரையில் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இரண்டு நாட்கள் பயணமாக, அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு 8.43 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்ந்தார். பிரதமரை சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், போலீஸ் டிஜிபி வெங்கட்ராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், மாநகர மேயர் பிரியா, பாஜ சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், நடிகை குஷ்பு, அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக, பாஜ கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன்பின்பு பிரதமர் நரேந்திர மோடி இரவு 8.50 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, கார் மூலம் ஜிஎஸ்டி சாலை வழியாக, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். இரவு கவர்னர் மாளிகையில், பிரதமர் மோடி தங்கி ஓய்வு எடுக்கிறார். இன்று காலையில் அவர் புதுவை புறப்பட்டுச் செல்கிறார். அதன்பின்னர் அங்கிருந்து மதுரை செல்கிறார். திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்.

திமுக கூட்டணியில் மின்னல் வேகத்தில் கூட்டணி பங்கீடுகள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவில் கூட்டணியை ஓரளவு உறுதி செய்த பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. அதற்கு காரணம், மாப்பிள்ளை எடப்பாடிதான். ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை பாஜவுடைய என்பதுபோல, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றாலும், கூட்டணியை ஏற்படுத்துவது பாஜதான். குறிப்பாக அமித்ஷாதான் கூட்டணியை உருவாக்கி வருகிறார். அன்புமணி பாமக, அமமுக மற்றும் சிறிய கட்சிகளை பாஜதான் கூட்டணிக்கு பேசி அழைத்து வந்தது.

அதேபோல ராமதாசையும் கூட்டணிக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் கடந்த வாரம் சென்னை வருவதாக இருந்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தனது பயணத்தை ரத்து செய்திருந்தார். இந்நிலையில்தான் பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்துள்ளார். இன்று மதுரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி.தினகரன், ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் இன்று காலை மதுரை செல்கின்றனர். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து பேசுகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் நாங்களே தொகுதிகளை பங்கிட்டுக் கொடுக்கிறோம். நீங்கள் மொத்தமாக தொகுதிகளை எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்டு வருகின்றனர். அப்போது 234 தொகுதிகளில் ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்வோம். ஒரு பாதியை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். மற்றொரு பாதியை நாங்கள் அனைத்துக் கட்சியினரும் பிரித்துக் கொள்கிறோம் என்று பாஜ கூறி வருகிறது. இதனால் இந்த தொகுதிப் பங்கீட்டை எடப்பாடி ஏற்பாரா அல்லது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பது நாளை தெரியும் என்கின்றனர் அதிமுக மூத்த தலைவர்கள்.

Related Stories: