சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ திடீர் சந்திப்பு: 3 கோரிக்கைகளை வைத்ததாக பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை வைகோ திடீரென சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். அப்போது அவர் மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளார். தொடர்ந்து வைகோ கூறியதாவது: காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் பெயரால் ஒரு பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும். அதை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். வறுமைக் கோட்டுக்கு உள்ளே உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுப்பதை தடுப்பதற்காக ஒன்றிய அரசு வஞ்சகமாக எடுக்கின்ற பல நடவடிக்கைகளுக்கு எப்படியோ ஒரு வகையில் உச்ச நீதிமன்றமும் உடன்பட்டுப் போகின்ற சூழலில், சூரிய ஒளி மின்சாரம் மூலமாக வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதற்கு அரசு முடிவெடுத்துவிட்டால், இதை தடுக்கின்ற முயற்சிகளிலிருந்து நாம் விடுபட்டு விடலாம் என்பதை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது சாலச் சிறந்ததாக இருக்கும்.

அதையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கூறினேன். இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற குழுவிடம் உடனே தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை. அவர் தமிழ்நாடு அரசிடமிருந்து உதவித் தொகை பெற்று வருகிறார். 2 கால்களும் செயலிழந்து நடக்க முடியாத சூழலில், சாதகமாக வாதாட வேண்டும் என்று பொய்யுரைத்து, அவரது கைரேகையைப் பெற்று, மற்றொரு குடும்பத்தினர் இந்தச் சத்திரம் எங்களுக்குரியது என்று ஒரு பொய்யான முறையீட்டை தயார் செய்து கொடுத்து, நாங்கள் பயன்படுத்தி வந்த கட்டபொம்மன் சத்திரத்தில் இந்த வருடம் நுழையக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளனர்.

இதை ரத்து செய்துவிட்டு, 9ம் நாள் மண்டகப்படி கட்டபொம்மன் சத்திரத்தில் நடைபெறுவதற்கு உதவ வேண்டும் என்று வீமராஜா எனக்கு கடிதமும் அனுப்பி, அலைபேசி வழியாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து நான் ஒரு முறையீட்டை தயார் செய்து முதல்வரிடம் தெரிவித்தேன். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் தகவலை கூறினீர்களா? என்று முதல்வர் கேட்டார். இல்லை என்றேன். உடனடியாக தனிச் செயலாளரை அழைத்து, அமைச்சர் சேகர்பாபுவிடம் உடனே தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள் என்றார். வருகிற 3ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஒவ்வொரு மண்டகப் படியாகச் சென்றுவிட்டு, சொரூபத்தைக் கொண்டு வருவார்கள். கட்டபொம்மன் மண்டகப்படிதாரர்கள் மிகவும் கவலையில் இருக்கிறார்கள். அறநிலையத்துறை அமைச்சர் மூலமாக இணை ஆணையர் ஆணையை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. அநேகமாக அது நிறைவேறும் என்றுதான் நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: