அம்பத்தூர் தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியதால் அதிமுக மாஜி எம்எல்ஏ அதிருப்தி

 

சென்னை மாநகராட்சியின் ஒரு அங்கமாக விளங்கக்கூடிய அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 2011ம் ஆண்டு வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரித்து அம்பத்தூர் தொகுதியாக மறுவரையறை செய்யப்பட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியாக உருவாக்கப்பட்டது. அம்பத்தூரில் நடைபெற்ற முதல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேதாச்சலம் வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட அலெக்ஸாண்டர் வெற்றி பெற்றார். 2021ம் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக நேரடியாக போட்டியிட்டது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜோசப் சாமுவேல் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அடுத்த மாதம் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களின் பலம் அறிந்து தொகுதியில் நிறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக கே.என்.சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். அம்பத்தூர் சென்னை மாநகராட்சியில் இணைக்கப்படுவதற்கு முன்பாக நகராட்சியாக செயல்பட்டு வந்தது. அப்பொழுது 2011ம் ஆண்டு அம்பத்தூர் நகர மன்ற தலைவராக கே.என்.சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாமகவில் மாநில துணை பொது செயலாளர் பதவி வகித்து வந்தார்.

தற்பொழுது பாமகவில் எந்த பதவியிலும் இல்லை என்றாலும் அம்பத்தூர் தொகுதியின் அரசியல் வட்டாரத்தில் முக்கிய நபராகவே இருந்து வருகிறார். அம்பத்தூர் தொகுதியை பொறுத்த வரையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருவள்ளுவர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அலெக்ஸாண்டர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென அம்பத்தூர் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அலெக்ஸாண்டர் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பி சட்டமன்ற தொகுதியில் பிரிந்து சென்ற கட்சி நிர்வாகிகளை மீண்டும் கட்சிக்குள் இணைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக வைத்திருந்தார்.

ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் அம்பத்தூர் பாமக கூட்டணி தொகுதிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் மாவட்ட செயலாளராக உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார். அதனை சுட்டிக்காட்டி அம்பத்தூரில் அதிமுக மாவட்ட செயலாளர் அந்தஸ்து இருந்தாலும் மக்களிடையே செல்வாக்கு இல்லை என கூறி தொகுதியை அதிமுகவிடம் இருந்து வேண்டுமென்றே பாமக பறித்துள்ளது என கூறப்படுகிறது.

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளரை நிறுத்தியதற்கு முக்கிய காரணம் வன்னியர்களின் வாக்கு. அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் வன்னியரும், பட்டியலின வகுப்பினரும் சம பலத்துடன் இருப்பதால், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பாமக அம்பத்தூர் தொகுதி கேட்டு பெற்றுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அலெக்சாண்டர் முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர். அவர் சார்ந்த சாதியினர் குறைவாகவே உள்ளதால் அவருக்கான சீட்டு மறுக்கப்பட்டுள்ளதாக தொகுதியில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் பாமகவிற்கு சீட்டை ஒதுக்கும் பட்சத்தில் வன்னியர்களின் வாக்கை பெற்று திமுக வேட்பாளருக்கு சவால் கொடுக்க கூடும் என்பதால் இந்த தொகுதியை பாமக கேட்டு பெற்றுள்ளது. தற்பொழுது அம்பத்தூர் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.என்.சேகர் நகரமன்ற தலைவராக இருந்தபோது கொரட்டூர் ஏரியில் வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டு பொதுமக்களின் 500 வீடுகள் ஆக்கிரமிப்பு என அரசு அகற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கட்சியில் துணை பொது செயலாளராக இருந்த அவரின் பதவி தலைமையால் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: