தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் களம் காண தயாராகி வருக்கின்றன. இதில், ஏற்கனவே தனித்து போட்டியில் நாம் தமிழர் கட்சி தங்களது வேட்பாளர்களை அறிவித்து அவர்கள் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். இந்நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ கே.பி.சங்கர், மண்டலக்குழு தலைவர்கள் திருவொற்றியூர் தி.மு.தனியரசு, மணலி ஏ.வி.ஆறுமுகம், பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன் கவுன்சிலர் கவி கணேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் என சுமார் 39 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்து, இவர்களுக்கான நேர்காணல் முடிந்துள்ளது. வேட்பாளர் யார் என தலைமையின் அறிவிப்பிற்காக அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
தனக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று விருப்ப மனு அளித்த பலர் எதிர்பார்த்து இருந்தாலும், திருவொற்றியூர் தொகுதிக்கு தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கும் வகையில் தொகுதியில் உள்ள அனைத்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் முன்னேற்பாடு பணியை தொடங்கி பிரசாரம் செய்ய தயார் நிலையில் உள்ளனர். அதேபோல், திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சுமார் 38 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. மேலும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் பட்டியலையும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். இதில், திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பனுக்கு பதிலாக அவரது மகனும், தற்போது 7வது வார்டு கவுன்சிலராக உள்ள கே.கார்த்திக்கு திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட தலைமை வாய்ப்பு கொடுக்க உள்ளதாக கடந்த ஒரு மாத காலமாக அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் அதிமுகவினர் கருத்து பரிமாறிக் கொண்ட நிலையில் தற்போது திருவொற்றியூர் தொகுதி தேர்தல் கள சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனவும் அதிமுகவினர் பேசி வருகின்றனர். இருப்பினும் ஒரிரு தினங்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் போதுதான் யார் திருவொற்றியூர் தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் என தெரியவரும். இவ்வாறு திருவொற்றியூர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்று இரு கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
