ஆவடி சட்டமன்ற தொகுதி பாஜவுக்கு ஒதுக்கியதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகம்

 

ஆவடி சட்டமன்ற தொகுதியை அதிமுக தனது கூட்டணியில் உள்ள பாஜவுக்கு ஒதுக்கியதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி, சென்னை மாநகரின் வடமேற்கில் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரே மாநகராட்சி ஆவடி. ஆவடி மாநகராட்சியில் கனரக ஊர்தி தொழிற்சாலை, போர் ஊர்தி தொழிற்சாலை வாரியம், போர் ஊர்தி ஆராய்ச்சி, வளர்ச்சி நிறுவனம், இந்திய விமானப்படை, சிஆர்பிஎப்., படை உடை தொழிற்சாலை, இன்ஜின் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ளன. கடந்த 2011ல், மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

ஆவடி சட்டமன்ற தொகுதியில், கடந்த 2021ம் ஆண்டு திமுக சார்பில் ஆவடி நாசர், அதிமுக சார்பில் மா.பா.பாண்டியராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.விஜயலட்சுமி, மக்கள் நீதி மய்யம் உதயகுமார் என பல கட்சிகள் போட்டியிட்டன. திமுக சார்பில் ஆவடி சா.மு.நாசர் 1,50,287 வாக்கு பெற்று வெற்றி பெற்றார். 2026 ஆவடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆவடி சா.மு.நாசர் மற்றும் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், அதிமுக சார்பில் அப்துல் ரஹீம், பா.சீனிவாசன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். பாஜ சார்பில் ராஜசிம்மகேந்திரா (அஸ்வின்) விருப்பம் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக – பாஜ கூட்டணி உறுதி செய்யப்பட்டு நேற்று தொகுதி பங்கீடு வெளியிடப்பட்டது. இதில், ஆவடி தொகுதி கூட்டணி கட்சியான பாஜவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சியும், பெரும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். ஏற்கனவே, ஆவடி தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.அப்துல்ரஹீம் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். கடந்த 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் மா.பா.பாண்டியராஜன் வெற்றி பெற்று அமைச்சரானார். மூன்று முறை நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆவடி தொகுதியை கூட்டணி கட்சியான பாஜவுக்கு ஒதுக்கியதால் திமுகவுக்கு சாதகமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வழக்கம்போல், திமுக – அதிமுக இடையே நேரடியான போட்டி நிலவும் நிலையில், இந்தமுறை வெற்றி வாய்ப்பு என்பது கணிக்க முடியாத ஒன்றாக அமையும். தற்போது தொகுதி இடம்மாறியதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பாக அமையும். ஏனென்றால் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் சிறுபான்மையினர் (முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள்) வாக்குகள் கணிசமான அளவில் உள்ளன. இது தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையத்திற்கு சிறுபான்மையினரின் துல்லியமான வாக்கு சதவீதம் தனித்து வெளியிட படுவதில்லை.

முக்கியத்துவம்: சென்னைக்கு அருகில் உள்ள புறநகர் தொகுதியாக இருப்பதால், ஆவடியில் சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் தொழிலாளர் வர்க்க வாக்குகளைக் கவர்வது அரசியல் கட்சிகளுக்கு முக்கியமானது.

Related Stories: