உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உத்திரமேரூரில் 73 ஊராட்சிகளும், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் ஒன்றியங்களில் 61 ஊராட்சிகளும் உள்ளன. இதில் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சியும் உள்ளது. உத்திரமேரூர் சட்ட மன்றத் தொகுதியில் மொத்தம் 2,65,950 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,28,070 ஆண் வாக்காளர்களும், 1,37,839 பெண் வாக்காளர்களும், 41 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1952 முதல் நடந்த 16 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 2 முறையும், சுயேட்சை ஒரு முறையும், 6 முறை அதிமுகவும் 7 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை உத்திரமேரூர் சட்ட மன்றத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் போட்டி உள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதியில் வன்னியர் சமூகத்தினருக்கான வாக்கு சதவீதம் கணிசமாக இருந்தபோதிலும் கடந்த சில தேர்தல்களில் பாமக களம் இறங்கி சொர்ப்ப வாக்குகளே பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசனுக்கு சீட் வழங்கப்படும் என அதிமுகவினர் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது உத்திரமேரூர் தொகுதி பாமகவிற்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாமகவிற்கு உத்திரமேரூர் சட்ட மன்ற தேர்தல் என்பது சவாலாகவே அமையும் என கூறப்படுகிறது.
