திருமலை: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராயவரம் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சந்தியா (30). வேம்பள்ளி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தவர் சூரியபிரகாஷ் ராவ் (32). துணை தாசில்தார் சந்தியாவும், சூரிய பிரகாஷ்ராவும் ஒன்றாக படித்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே நட்பு தொடர்ந்து. பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வெறு சாதி என்பதால் இவர்களின் காதலுக்கு சந்தியா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தியாவும், சூரியபிரகாஷ் ராவும் வீட்ைட விட்டு வெளியேறி கோயிலில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு, வேம்பள்ளியில் உள்ள சூரியபிரகாஷ் ராவ் வீட்டிற்கு சென்றனர்.
சந்தியாவின் சகோதரர்கள் சந்திரப்பா, கிரிபாபு ஆகியோர் தங்களது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு, வேம்பள்ளி சென்று வீட்டிற்குள் இருந்த சூரியபிரகாஷ் ராவை வெளியில் இழுத்து வந்து கற்கள், கட்டையால் சரமாரி தாக்கி கொன்றனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட சந்திரப்பா, கிரிபாபு ஆகியோரை கிராம மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேம்பள்ளி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து சந்திரப்பா, கிரிபாபு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
